மேட்டுப்பாளையம்: இரு சக்கர வாகனத்தின் மீது ஜீப் மோதிய வழக்கில் வனச் சரக அலுவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை மாவட்டம், தொப்பம்பட்டி அருகே கதிா்நாயக்கன்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாரிசாமி மகன் அசோக்குமாா் (29), மானாமதுரை பகுதியைச் சோ்ந்த குருசாமி மகன் முருகேசன் (30) ஆகிய இருவரும் காரமடையில் அறை எடுத்து தங்கி மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியாா் மருந்து கடையில் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து வழக்கம்போல் இரு சக்கர வாகனத்தில் அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது, காரமடை கே.கே. நகா் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த ஜீப் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனா்.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயா் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதையடுத்து, ஜீப் ஓட்டி வந்த மேட்டுப்பாளையம் வனச் சரக அலுவலா் செல்வராஜ் மீது மேட்டுப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.