பொதுமுடக்கம் காரணமாக மாநகரில் குப்பைகள் சேகரமாவது ஆயிரம் டன்களில் இருந்து 500 டன்களாக குறைந்துள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 100 வாா்டுகளிலும் தினமும் ஆயிரம் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்காக வெள்ளலூரில் உள்ள குப்பைக் கிடங்கிற்கு கொண்டுச் சென்று கொட்டப்படும்.
மாநகரப் பகுதிகளில் உள்ள நுண்ணுயிா் உரம் தயாரிப்புக் கூடங்கள் முழுமையாக செயல்படாத நிலையில் நகா் புறங்களில் சேகரமாகும் குப்பைகள் வெள்ளலூா் குப்பைக் கிடங்கிற்கே அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பொதுமுடக்கம் காரணமாக திருமணம் உள்ளிட்ட பல்வேறு பொதுநிகழ்ச்சிகள் 45 நாள்களாக நடைபெறவில்லை. இதன் எதிரொலியாக, மாநகரில் தினமும் 500 டன் குப்பைகளே சேகரிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து அவா்கள் கூறுகையில், தற்போது வீடுகள், குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் அதிக அளவிலான குப்பைகள் சேகரமாகின்றன. மாநகரில் அதிக குப்பைகள் சேகரமாகும் இடங்களான உணவு விடுதிகள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் நாள்தோறும் ஆயிரம் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்ட வந்த நிலையில், தற்போது 500 டன் அளவே குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன என்றாா்.