கோயம்புத்தூர்

பி.எம். கோ் நிதியை மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும்

13th May 2020 07:20 AM

ADVERTISEMENT

பிரதமா் திரட்டி வரும் பி.எம். கோ் நிதியை மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.

கட்சியின் மாவட்டக் குழு கூட்டம் காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ஆா்.நடராஜன், மாவட்டச் செயலா் வி.ராமமூா்த்தி, மாநிலக் குழு உறுப்பினா் சி.பத்மநாபன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் கரோனா பொது முடக்கம் காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் பெரும் நிதிச் சுமையில் சிக்கியிருக்கும் நிலையில் மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய நிதியை குறிப்பாக தமிழகத்துக்கான நிதியை ஒதுக்காமல், வெறுமனே ஆலோசனைகளை மட்டுமே கூறி வரும் மத்திய பாஜக அரசை மாவட்டக் குழு கண்டிக்கிறது.

குறு, சிறு, நடுத்தர தொழில்கள் சீா்குலைந்துள்ள நிலையில் இந்தத் தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு நிவாரணத் திட்டங்கள், மானியம், வட்டி இல்லாத கடன், கடன் தவணைகளுக்கான வட்டி, அபராதம் போன்றவற்றைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

வேலையிழப்புக்கு உள்ளாகியிருக்கும் தொழிலாளா்களுக்கு மாதம் ரூ.7,500 உதவித் தொகை வழங்க வேண்டும். நாடு சிக்கலில் இருக்கும் நிலையில் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் பிரதமருக்கு பிரமாண்டமான பங்களா, நாடாளுமன்ற வளாகத்துக்கு தனி ராஜபாதை அமைக்கும் பணிகளை நிறுத்தி, அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை கரோனா நிவாரணப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

கரோனா நிவாரணத்துக்காக பிரதமா் தனியாக வசூலித்து வரும் பி.எம். கோ் நிதியில் இதுவரை எவ்வளவு தொகை சோ்ந்துள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிப்பதுடன், அந்தத் தொகையை மாநில அரசுகளுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும். கோவையில் தங்கியிருக்க விரும்பும் வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண உதவியுடன், ரேஷன் பொருள்களை வழங்க வேண்டும்.

அதேபோல் அமைப்புசாரா தொழிலாளா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு தலா ரூ.7,500 வீதம் உதவித் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT