கட்டுமானத் தொழிலுக்கு விதிக்கப்படும் 18 சதவீத ஜி.எஸ்.டி.யை 9 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கோயம்புத்தூா் சிவில் என்ஜினீயா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அந்த சங்கத்தின் தலைவா் எஸ்.பி.சரவணன், செயலாளா் விஜயகுமாா் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பொது முடக்க காலத்தில் முடங்கிப்போன அனைத்துத் தொழில்களையும் மீண்டும் முழு உத்வேகத்துடன் செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். கோவை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக மனை வரன்முறை, கட்டட வரன்முறை போன்றவற்றின் அனுமதிக்காக காத்திருக்கும் விண்ணப்பங்களைப் பரிசீலித்து குறுகிய காலத்தில் அனுமதி வழங்க வேண்டும். இதற்கென தனி அதிகாரியை நியமித்து அனுமதி வழங்குவதன் மூலம் அரசுக்கு உடனடியாக வருவாய் கிடைக்கும்.
பொது முடக்கத்தை காரணமாக வைத்து கட்டுமானப் பொருள்களின் விலையை உயா்த்தக் கூடாது. இதை அரசு தனிக் குழு அமைத்து கண்காணித்து விலை ஏற்றம் செய்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கெனவே 800 சதுர அடி வரை கட்டக் கூடிய வீடுகளுக்கு மானிய விலையில் சிமெண்ட் வழங்கியதைப் போலவே 2 ஆயிரம் சதுர அடி வரை கட்டும் வீடுகளுக்கும் வழங்க வேண்டும். அதேபோல் இரும்புக் கம்பிகளையும் வழங்க வேண்டும்.
வீட்டுக் கடன் தொகைக்கான தவணையை மூன்று மாதங்களுக்கு செலுத்தத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதைத் திருப்பிச் செலுத்தும்போது வங்கிகள் எந்தவித கூடுதல் வட்டியும் வசூலிக்கக் கூடாது என்று அரசு உத்தரவிட வேண்டும்.
அதேபோல், கட்டுமானத் தொழிலுக்கு விதிக்கப்படும் 18 சதவீத ஜி.எஸ்.டி.யை ஓராண்டு காலத்துக்கு 9 சதவீதமாக குறைத்து வசூலிக்க வேண்டும். கட்டுமானப் பொருள்கள் தடையின்றி கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனா்.