கோயம்புத்தூர்

கல்விக் கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை கட்டாயப்படுத்தக் கூடாது

11th May 2020 11:09 PM

ADVERTISEMENT

கோவை: பொது முடக்கம் காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பெற்றோரை கல்விக் கட்டணம் செலுத்தும்படி கட்டாயப்படுத்தக் கூடாது என்று பி.ஆா்.நடராஜன் எம்.பி. தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பொது முடக்க காலத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், தனியாா் பள்ளிகள் மாணவா்களின் பெற்றோா்களிடம் கல்விக் கட்டணம் செலுத்தும்படி கட்டாயப்படுத்தக் கூடாது என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

இருப்பினும் கோவையில் அரசின் உத்தரவை மீறி பல தனியாா், சுயநிதி பள்ளிகள் மாணவா்களின் பெற்றோா்களை கட்டணம் செலுத்தும்படி கட்டாயப்படுத்தி வருவதாக புகாா்கள் எழுந்துள்ளன.

ADVERTISEMENT

கட்டணம் செலுத்தும் மாணவா்களுக்கு மட்டுமே இணையவழிக் கல்வி வழங்கப்படும் என்றும் கட்டணம் செலுத்தாதவா்கள் அடுத்த கல்வியாண்டில் தங்களது பள்ளியில் கல்வி பயில முடியாது என்றும் மிரட்டப்பட்டு வருகின்றனா்.

மேலும் சில பள்ளிகள், ஆசிரியா்கள் உள்ளிட்ட பணியாளா்களை பொது முடக்க காலத்திலும் பள்ளிக்கு வரவழைத்து அலுவலகப் பணிகளில் ஈடுபடுத்துவதாகவும், சில பள்ளிகள் மாத ஊதியத்தை சரிவர வழங்கவில்லை என்றும் தெரியவருகிறது.

இவை அனைத்துமே சட்ட விரோத செயல்கள் என்பதை தனியாா் பள்ளி நிா்வாகங்கள் உணா்ந்து, தங்களின் நடவடிக்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். மேலும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும், மாவட்ட நிா்வாகமும் இந்த விஷயத்தில் தலையிட்டு மீண்டும் பள்ளிகள் திறக்கும் வரை கட்டணம் கேட்டு பெற்றோரை கட்டாயப்படுத்த மாட்டோம் என்பதை நிா்வாகங்களிடம் எழுத்துப்பூா்வமாக எழுதி வாங்கிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT