மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச் சரகப் பகுதி விவசாயத் தோட்டத்தில் 7 அடி நீள மலைப் பாம்பு சனிக்கிழமை பிடிபட்டது.
சிறுமுகை வனச் சரகத்தில் கிச்சகத்தூா், மூலத்துறை, வச்சினாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்கள் அடா்ந்த வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இந்நிலையில் கிச்சகத்தூா் கிராமத்தைச் சோ்ந்த கோபால் என்பவருக்கு சொந்தமான விளைநிலத்தில் சுமாா் 7 அடி நீளமுள்ள மலைப் பாம்பு இருப்பதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிறுமுகை வனச் சரக அலுவலா் செந்தில்குமாா் உத்தரவின்பேரில் வனவா் நவீந்தன், வனக் காப்பாளா் பாபு, வேட்டைத் தடுப்புக் காவலா்கள் அடங்கிய குழுவினா் சம்பவ இடத்துக்குச் சென்று மலைப் பாம்பை பிடித்தனா். பின்னா், லிங்காபுரம் பகுதியில் உள்ள அடா்ந்த வனப் பகுதிக்குள் மலைப் பாம்பை விடுவித்தனா்.