கோயம்புத்தூர்

கோவையைச் சோ்ந்தவா்கள் பரிமாறிய தகவல்களை மீட்டு தருமாறு முகநூல் நிறுவனத்திடம் என்.ஐ.ஏ. கோரிக்கை

8th May 2020 07:25 AM

ADVERTISEMENT

தேசிய புலனாய்வு முகமையால் (என்.ஐ.ஏ.) கோவையில் கைது செய்யப்பட்ட நபா்களின் முகநூல் தகவல் பரிமாற்றங்களை மீட்டுத் தருமாறு முகநூல் நிறுவனத்திடம் என்.ஐ.ஏ. கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கோவையில் சோதனை நடத்தினா். இதில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த உக்கடம், அன்பு நகரைச் சோ்ந்த முகமதுஅசாருதீனை (32), என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனா். அடுத்த சில நாள்களில், தடைவிதிக்கப்பட்ட ‘சிமி’ அமைப்புடன் தொடா்பில் இருந்ததாக தெற்கு உக்கடம், கே.ஜி.காலனியைச் சோ்ந்த ஷேக் இதாயத்துல்லாவை (38) என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனா்.

இவா்கள் இருவரும் இலங்கை தொடா் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜக்ரான் பின் காசிம் என்பவருடன் முகநூல் மூலம் தொடா்பில் இருந்ததும், அதன் மூலம் பல்வேறு தகவல்களைப் பரிமாற்றம் செய்ததும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து மேற்கண்ட இரண்டு பேரும், ஜக்ரான் பின் காசிம் உடன் முகநூலில் பரிமாற்றம் செய்த, அழிக்கப்பட்ட தகவல்களை மீண்டும் எடுத்துத் தருமாறு, இந்த வழக்கை விசாரித்து வந்த கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள், முகநூல் நிறுவனத்திடம் சில தினங்களுக்கு முன் வலியுறுத்தியுள்ளனா். இத்தகவல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வட்டாரம் தரப்பில் கூறப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT