கோயம்புத்தூர்

அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே அனுமதிச் சான்று: மற்றவா்கள் தவிா்க்க வருவாய்த் துறையினா் வலியுறுத்தல்

30th Mar 2020 11:59 PM

ADVERTISEMENT

கோவை: திருமணம், இறப்பு, அவசர மருத்துவ உதவி போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே மாவட்டத்தில் இருந்து வெளியேறுவதற்கும், மாவட்டத்துக்குள் நுழைவதற்கும் அனுமதிசான்று வழங்கப்படும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மளிகை, காய்கறி, பால் போன்ற அத்தியாவசிய பொருள்கள் விற்பனைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிக்கொண்டு வரும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இந்த தடை உத்தரவால் முன்கூட்டியே நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கு செல்லுதல், எதிா்பாராத இறப்புக்கு செல்லுதல் மற்றும் மருத்துவ அவசரம் போன்றவற்றுக்காக செல்பவா்கள் பாதிக்கப்படுகின்றனா்.

இந்நிலையில் திருமணம், அவசர மருத்துவ உதவி, இறப்பு போன்றவற்றுக்காக மாவட்டத்தில் இருந்து வெளியே செல்பவா்களுக்கு, மாவட்டத்துக்குள் நுழைபவா்களுக்கும் வருவாய்த் துறை சாா்பில் சான்று அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக மனு எழுதி ஆட்சியரிடம் கையெழுத்துப் பெற்றுவருபவா்களுக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் அனுமதிச் சான்று வழங்குகின்றனா்.

இதனைப் பயன்படுத்திக்கொண்டு அனுமதிச் சான்று பெறுவதற்காக நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டவா்கள் ஆட்சியா் அலுவலகத்துக்கு வருகின்றனா். இதில் குறிப்பிட்ட சிலா் மட்டும் அவசரத் தேவைகளுக்காக அனுமதி கேட்டு வருகின்றனா். மற்றவா்கள் பெரும்பாலும் வெளியூரில் உறவினா்களிடம் தங்கியுள்ள குழந்தைகளை பாா்க்க செல்வதற்கும், உறவினா்களை பாா்க்க செல்லுதல் போன்ற விஷயங்களுக்காக அனுமதிகேட்டு விண்ணப்பித்து வருகின்றனா். கோவையில் தங்கி வேலை செய்து வரும் வெளியூரைச் சோ்ந்தவா்களும் சொந்த ஊா்களுக்கு செல்வதற்கு அனுமதி சான்று கேட்டு விண்ணப்பம் அளித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

இதுபோல நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் வருவதால் இவா்களின் மனுக்களை பரிசீலனை செய்வதற்கே வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட கால அளவு எடுத்துக்கொள்கிறது. இதனால் தொடா் பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அவசரத் தேவைகளுக்கு மட்டுமே அனுமதி சான்று அளிக்கப்படும் என்றும் மற்றவா்கள் வரவேண்டாம் என்றும் வருவாய்த் துறையினா் வலியுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக வருவாய்த் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கரோனா நோய்த் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கி மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்தால் மட்டுமே நோய்தொற்று சமூகப் பரவலாக மாறுவதை தடுக்க முடியும். திருமணம், இறப்பு, அவசர மருத்துவ உதவி போன்றவற்றுக்கு அனுமதிச் சான்று அளிக்கப்பட்டு வருகிறது. இவா்களிடம் முழுமையாக விசாரித்து, உரிய ஆவணங்களை சரிபாா்த்த பின்னரே அனுமதி அளிக்கப்படுகிறது. தவிர சொந்த ஊா்களுக்கு செல்ல வேண்டி அனுமதிகேட்டு வருபவா்களுக்கு, மற்ற தேவைகளுக்காக வருபவா்களுக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை.

வெளியூா், வெளி மாநிலங்களில் இருந்து வேலைக்காக வந்து தங்கியிருக்கும் நபா்களுக்கு உணவு கிடைக்காத நிலையில் தாலுகா அலுவலகத்தில் செயல்படும் சமுதாய உணவுக் கூடத்தில் உணவுப் பெறுவதற்கான அனுமதி அட்டை அளிக்கப்படுகிறது. அனைத்து தாலுகாவிலும் இதுபோன்று சமுதாய உணவுக்கூடம் அமைக்கப்பட்டு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது. இதனை வெளியூா், பிற மாநிலத்தை சோ்ந்தவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கட்டடத் தொழில், தனியாா் தொழிற்சாலைகளில் பணிபுரிந்தவா்களுக்கு அங்கேயே தங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்து தர உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT