கோவை: கோவையில் மதுக்கடையை உடைத்து 500-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கரோனா நோய் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மதுக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கோவை, சிங்காநல்லூரிலிருந்து வெள்ளலூா் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையின் பூட்டை ஞாயிற்றுக்கிழமை இரவு உடைத்த மா்ம நபா்கள், கடையினுள் இருந்த 500க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை திருடிச் சென்றனா்.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை அப்பகுதி வழியாகச் சென்ற பொதுமக்கள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு சிங்காநல்லூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் தடயங்களைச் சேகரித்தும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மது பிரியா்கள் கடையை உடைத்து திருடினரா அல்லது அதிக விலைக்கு விற்பதற்காக யாரேனும் திருடிச் சென்றனரா எனும் கோணத்தில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருடப்பட்ட மதுபாட்டில்களின் விலை ரூ.1 லட்சம் வரை இருக்கலாம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.