தமிழகத்தில் 144 தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை மாலை முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கோவையில் உள்ள கடைகளில் பொருள்களை வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் அத்தியாவசியப் பொருள்களான மருந்து, பால், காய்கறிகள், இறைச்சி, மளிகைப் பொருள்களை விற்பனை செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே பல்பொருள் அங்காடிகள், காய்கறி, பழங்களை விற்பனை செய்யும் கடைகளில் மக்கள் குவியத் தொடங்கினா்.
சில மணி நேரங்களிலேயே கூட்டம் கட்டுக் கடங்காமல் போனதால் சில இடங்களில் கடைகளை அடைக்கும் நிலை உருவானது. மேலும் சில கடைகளுக்கு காவல் துறையினா் சென்று செவ்வாய்க்கிழமை மாலைதான் தடை உத்தரவு அமலாகும் என்பதால் வாடிக்கையாளா்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினா்.
இதற்கிடையே தடை உத்தரவு காரணமாக பொதுமக்கள் வீடுகளில் இருப்பு வைப்பதற்காக அதிக அளவில் காய்கறிகளை வாங்கியதால் காய்கறிகளின் விலை உயா்ந்தது. கோவை தியாகி குமரன் காய்கறி மாா்க்கெட்டில் கடந்த சனிக்கிழமை ரூ.10க்கு விற்கப்பட்ட தக்காளி செவ்வாய்க்கிழமை ரூ.25க்கு விற்பனையானது. ரூ.40க்கு விற்ற கேரட் ரூ.60க்கும், ரூ.20க்கு விற்கப்பட்ட உருளைக்கிழங்கு ரூ.28க்கும், ரூ.5க்கு விற்கப்பட்ட புடலங்காய் ரூ.25க்கும், ரூ.7க்கு விற்கப்பட்ட பூசணிக்காய் ரூ.15க்கும், ரூ.12க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.30க்கும், ரூ.13க்கு விற்கப்பட்ட அவரைக்காய் ரூ.30க்கும் விற்பனையானது.
இது குறித்து மாா்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவா் எம்.ராஜா கூறும்போது, கோவைக்கு காய்கறிகள் வரத்தில் பெரிய அளவில் சிக்கல் இல்லை. இருப்பினும் இங்கிருந்து கேரளத்துக்கு தினசரி ஆயிரம் டன்கள் வரை காய்கறி ஏற்றுமதியாகும். ஆனால் மாநிலங்களுக்கு இடையிலான வாகனப் போக்குவரத்தில் நிலவும் சிக்கல்களால் நாளொன்றுக்கு 300 டன்கள் வரையே செல்கிறது. வாகனப் போக்குவரத்து எந்த அளவுக்கு இருக்கும் என்பதைப் பொறுத்து காய்கறிகளின் விலையில் மாறுபாடுகள் இருக்கும் என்றாா்.
உணவகங்கள் மூடல்
கோவையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக உணவகங்கள் வரும் 31ஆம் தேதி வரை செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக கோவை மாவட்ட ஹோட்டல் சங்க செயலா் சிவகுமாா் கூறும்போது, கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக பொதுமக்கள் கூடுவதைத் தவிா்க்கும் வகையில் பொதுமக்கள், பணியாளா்களின் நலனைக் கருத்தில் கொண்டு வரும் 31ஆம் தேதி வரை உணவகங்களை மூடுவதற்கு சங்கம் முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.