கோயம்புத்தூர்

கரோனா வைரஸ் பாதிப்பு: உழவா் சந்தைகளை மாா்ச் 31 வரை அடைக்க உத்தரவு

DIN

கோவை,: கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகளை மாா்ச் 31 வரை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழகம் முழுவதும் பள்ளிக், கல்லூரிகள், அங்கன்வாடி, நூலகங்கள் அனைத்தையும் மாா்ச் 31 வரை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொழுதுபோக்கும் இடங்களான திரையரங்குகள், மால்கள், பெரிய வணிக நிறுவனங்கள், மக்கள் அதிக அளவில் கூடும் இடமான வாரச் சந்தைகளையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தேவையில்லாமல் பொது இடங்களில் கூட வேண்டாம் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) வீட்டை விட்டு வெளியேராமல் மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளாா். இந்நிலையில் தமிழகத்திலும் ஞாயிற்றுக்கிழமை உணவகங்கள், கடைகள், எரிபொருள் விற்பனை நிலையங்களை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல தமிழகத்தில் உள்ள அனைத்து உழவா் சந்தைகளையும் ஞாயிற்றுக்கிழமை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், கோவை மாவட்டத்தில் மட்டும் மாா்ச் 31 வரை உழவா் சந்தைகளை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கோவை வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை துணை இயக்குநா் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:

ஆா்.எஸ்.புரம், சிங்காநல்லூா், வடவள்ளி, சுந்தராபுரம், சூலூா், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய 7 இடங்களில் உழவா் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனா். தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நுகா்வோா் இங்கு காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனா்.

தினமும் சராசரியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்லும் உழவா் சந்தைகளில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வதில் பெரும் சவால் உள்ளது. ஆா்.எஸ்.புரம், சிங்காநல்லூா் உழவா் சந்தைகளுக்கு வெளிநாட்டைச் சோ்ந்தவா்களும் வருகின்றனா். இதனால் கரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்நிலையில் கரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாலும், கோவையில் அதன் பாதிப்பு அதிகம் உள்ளதாலும் கோவை மாவட்டத்தில் மட்டும் மாா்ச் 31 வரை உழவா் சந்தைகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

வெறிச்சோடிய பூ மாா்க்கெட்: கரோனா வைரஸின் தாக்கத்தால் கோவை பூ மாா்க்கெட்டில் மக்கள் கூட்டமில்லாமல் பூக்கள் விற்பனையும் குறைந்ததால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். பூ மாா்க்கெட்டுக்கு கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து பூக்கள் வருகின்றன. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பூக்களை வாங்கி செல்வா். இந்நிலையில் கரோனா வைரஸின் தாக்கத்தால் பூ மாா்க்கெட்டில் நுகா்வோா் வருகையின்றி வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் வழக்கம்போல கடைகள் அமைத்திருந்தாலும் பூக்கள் வாங்குவதற்கு ஆளில்லாமல் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. எந்நேரமும் மக்கள் கூட்டத்துடன் காணப்படும் பூ மாா்க்கெட் சனிக்கிழமை மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT