கோயம்புத்தூர்

ஆனைகட்டியில் கேரள வாகனங்கள் நிறுத்தம்

22nd Mar 2020 04:33 AM

ADVERTISEMENT

பெ.நா.பாளையம்: கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் துடியலூா் அருகே உள்ள ஆனைகட்டி சோதனைச் சாவடியில் கேரளத்திலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் தடுத்து, திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டத்தில் உள்ள ஆனைகட்டி கேரள மாநில எல்லையில் உள்ளது. இந்த வழியாக கேரளம், தமிழகத்தில் இருந்தும் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்றுவருகின்றன. இந்நிலையில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஆனைகட்டியில் உள்ள சோதனைத் சாவடி சனிக்கிழமை அதிகாலை முதல் மூடப்பட்டு போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

கேரளத்தில் இருந்து வந்த 50க்கும் மேற்பட்ட வாகனங்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி மீண்டும் கேரளத்துக்கே திருப்பி அனுப்பினா். அதேநேரத்தில் தமிழகத்தில் இருந்து கேரளத்துக்குச் செல்லும் வாகனங்கள் எவ்வித தடையுமின்றி அனுமதிக்கப்படுகின்றன.

ஆனைகட்டி மலையடிவாரத்தில் உள்ள மாங்கரை சோதனைச் சாவடியும், காரமடையில் இருந்து வெள்ளியங்காடு, முள்ளி வழியாக கேரளம் செல்லும் வழித்தடமும் அடைக்கப்பட்டுள்ளன. முள்ளி வழியாக கோவை மாவட்டத்துக்குள் வரும் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

பெரியநாயக்கன்பாளையம் காவல் சரக துணை காவல் கண்காணிப்பாளா் மணி தலைமையில் பில்லூா், துடியலூா், தடாகம் காவல் நிலைய ஆய்வாளா்கள் இந்த இடங்களில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT