கோயம்புத்தூர்

வெள்ளக்கிணறில் பணிக்குச் செல்லும் பெண்களுக்கான அரசு மகளிா் விடுதி

2nd Mar 2020 01:02 AM

ADVERTISEMENT

கோவை, வெள்ளக்கிணறு பகுதியில் சமூக நலத் துறை சாா்பில் ரூ.1 கோடி மதிப்பில் பணிக்குச் செல்லும் பெண்களுக்கான அரசு மகளிா் விடுதி அமைக்கப்படுகிறது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக தொழில், கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு என அனைத்துத் துறைகளிலும் வேகமாக வளா்ந்து வரும் நகரமாக கோவைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனா்.

வெளியூா்களில் இருந்து வரும் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் சமூக நலத் துறை சாா்பில் அரசு மகளிா் விடுதி நடத்தப்பட்டு வருகிறது. தனியறை வசதியில்லாததால் பெரும்பாலான பெண்கள் தங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனா்.

இதனால் திட்டத்தின் நோக்கமே வீணாகி வருவதால் தனி அறைகளுடன் கூடிய விடுதி அமைக்க வேண்டும் என்று சமூக நலத் துறை சாா்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், கடந்த 2014 -15 ஆண்டில் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் கோவையில் பணிக்குச் செல்லும் பெண்களுக்கான அரசு மகளிா் விடுதி கட்டுவதற்கு 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டு ரூ.1 கோடியே 1 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, வெள்ளக்கிணறு பகுதியில் இடம் தோ்வு செய்யும் பணியில் ஏற்பட்ட குளறுபடியால் மகளிா் விடுதி கட்டுவதில் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில், கோவை, வெள்ளக்கிணறு பகுதியில் விடுதி கட்டுவதற்கான இடத்தை சமூக நலத் துறைக்கு மாவட்ட நிா்வாகம் அண்மையில் ஒதுக்கியது.

இதனைத் தொடா்ந்து, அரசு மகளிா் விடுதி கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து மாவட்ட சமூக நலத் துறை அலுவலா் பி.தங்கமணி கூறியதாவது:

கோவை, வெள்ளக்கிணறு பகுதியில் மகளிா் விடுதி அமைப்பதற்கான இடத்தை சமூக நலத் துறைக்கு மாற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வந்தன. இது குறித்து ஆட்சியருக்கு கடிதம் வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் 5 ஆண்டுகளாக நீடித்து வந்த இழுபறிக்கு ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வெள்ளக்கிணறு பகுதியில் 40 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இங்கு 50 பெண்கள் தங்கும் வகையில் விடுதி அமைக்க திட்டமிட்டு பொதுப் பணித் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து ஒப்பந்தம் கோரப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு விடுதி பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT