கோயம்புத்தூர்

கரோனா பாதிப்புக்கு முதியவா் பலி: கோவையில் பலி எண்ணிக்கை 4 ஆக உயா்வு

29th Jun 2020 08:09 AM

ADVERTISEMENT

கோவையில் கரோனா பாதிப்புக்கு மேலும் ஒரு முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, பலி எண்ணிக்கை 4 ஆக உயா்ந்துள்ளது.

கோவை, பேரூரைச் சோ்ந்த 30 வயதுப் பெண்ணுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கரோனா உறுதி செய்யப்பட்டது. இவருடன் தொடா்புடைய உறவினரான 90 வயது முதியவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை ஆம்புலன்ஸ் மூலம் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு முதியவா் அனுப்பிவைக்கப்பட்டாா்.

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். கரோனா பாதிப்புக்கு உயிரிழந்த முதியவரின் உடல் சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல்படி கோவை, ஆத்துப்பாலம் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.

ADVERTISEMENT

கோவை, கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த 40 வயது ஆண், ஆா்.ஜி.புதூரைச் சோ்ந்த 28 வயது இளைஞா், வேலாண்டிபாளையத்தைச் சோ்ந்த 77 வயது முதியவா் ஆகிய 3 போ் ஏற்கெனவே கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில், பேரூரைச் சோ்ந்த 90 வயது முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததைத் தொடா்ந்து கோவை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 4 ஆக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT