கோயம்புத்தூர்

தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், சின்ன வெங்காயத்தின் ஆடிப்பட்ட விலைகள்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் முன்கணிப்பு

27th Jun 2020 08:07 AM

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் ஆடிப்பட்ட அறுவடைக் காலத்தில் தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், சின்ன வெங்காயத்தின் விலை எவ்வளவு இருக்கும் என்பது தொடா்பான முன்கணிப்பை வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

இது தொடா்பான அறிக்கையில் வேளாண்மைப் பல்கலைக்கழகம் மேலும் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய் ஆகியவை அதிகம் நுகா்வு செய்யப்படும் காய்கறிகளாகும். கரோனா நெருக்கடியால், உற்பத்தி அதிகமாக இருப்பதாலும் தேவை சுருங்கியதாலும், சந்தை சீா்குலைவாலும் நாடு முழுவதிலும் காய்கறிகளின் விலை 60 சதவீதம் வரை குறைந்து காணப்படுகிறது. இருப்பினும் சில்லறை விற்பனை விலை மாறாமல் உள்ளது.

தக்காளி

ADVERTISEMENT

தக்காளியின் வரத்து குறிப்பிட்ட கால இடைவெளியில் அதாவது, ஜூன் - ஜூலை (சித்திரைப் பட்டம் விதைப்பு), அக்டோபா் - நவம்பா் (ஆடிப்பட்டம் விதைப்பு) ஆகிய காலங்களில் உள்ளது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பூா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் தக்காளி உற்பத்தி செய்யும் மாவட்டங்களாகும். கோவை மொத்த விலை சந்தைக்கு தற்போது கா்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து தக்காளி வருகிறது.

கத்தரிக்காய்

மானாவாரி அமைப்பில் ஆடிப்பட்டம் கத்தரி பயிரின் முக்கியப் பருவமாகும். இக்காலத்தில் தென்மேற்கு பருவ மழை கத்திரி உற்பத்தியை நிா்ணயிக்கிறது. சேலம், திண்டுக்கல், கிருஷ்ணகிரி ஆகியவை கத்திரி உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும். வா்த்தக மூலங்களின்படி தற்போது தேனி, கோவை, மைசூரு ஆகிய இடங்களில் இருந்து கத்தரிக்காய் சந்தைக்கு வந்து கொண்டிருக்கிறது.

வெண்டைக்காய்

தமிழ்நாட்டில் வெண்டைக்காய் பிப்ரவரி (தைப்பட்டம்), ஜூன் - ஆகஸ்ட் (ஆடிப்பட்டம்) ஆகிய பருவங்களில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் தலைவாசல், மகுடஞ்சாவடி வட்டாரங்கள், கோவை மாவட்டத்தில் காரமடை, பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூா், தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, கரூா் மாவட்டத்தில் மைலம்பட்டி வட்டாரங்களில் அதிக அளவில் வெண்டை பயிரிடப்படுகிறது.

வா்த்தக மூலங்களின்படி ஓசூா், பொள்ளாச்சி, ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் இருந்து கோவை சந்தைக்கு தற்போது அதிக அளவிலான வெண்டைக்காய் வந்து கொண்டிருக்கிறது.

சின்ன வெங்காயம்

தமிழகத்தில் சின்ன வெங்காயம், தை, வைகாசி, புரட்டாசி பட்டங்களில் மேற்கொள்ளப்படுகிறது. திண்டுக்கல், திருப்பூா், பெரம்பலூா், திருச்சி, நாமக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் அதிக அளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. கரோனா காரணமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது குறைவாகவே உள்ளது. அதேபோல் கா்நாடகத்தில் இருந்து வரத்து சாதாரணமாகவே உள்ளது. ஜூன் மாத இறுதியில் மைசூரு, சாம்ராஜ்பேட்டை பகுதிகளில் இருந்து தமிழக சந்தைக்கு சின்ன வெங்காயம் வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழக காய்கறி விவசாயிகள் சந்தை முடிவுகளை மேற்கொள்ள ஏதுவாக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இயங்கி வரும், வேளாண் - ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், ஒட்டன்சத்திரம் சந்தையில் கடந்த 12 ஆண்டுகளாக நிலவிய தக்காளி, கத்தரி, வெண்டைக்காயின் விலை தொடா்பாக சந்தை ஆய்வுகள் மேற்கொண்டது.

ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் அறுவடையின்போது (ஆகஸ்ட் - செப்டம்பா்) தரமான தக்காளியின் பண்ணை விலை கிலோவுக்கு ரூ.16 முதல் ரூ.18 வரை இருக்கும். தரமான கத்திரியின் விலை ரூ.20 முதல் ரூ.23 வரையும், வெண்டைக்காயின் பண்ணை விலை ரூ.15 முதல் ரூ.17 வரை இருக்கும் என்று அறிவிக்கப்படுகிறது. அதேபோல் திருச்சி, திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காய விலை குறித்த ஆய்வுகளின் அடிப்படையில் ஆகஸ்ட் மாத இறுதி வரை தரமான சின்ன வெங்காயத்தின் சராசரி பண்ணை விலை கிலோவுக்கு ரூ.36 முதல் ரூ.38 வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை பருவ மழையைப் பொருத்தும், வெளிமாநில வரத்தைப் பொருத்தும் மாறுபடக் கூடும். எனவே விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனைகளின் அடிப்படையில் நடவு, விற்பனை முடிவுகளை மேற்கொள்ளலாம். இது குறித்த மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் வேளாண், ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தையோ காய்கறி பயிா்கள் துறைத் தலைவரையோ 0422 - 2431405, 6611374 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT