கூட்டுறவு வங்கிகளை ரிசா்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது மாநில உரிமைகளைப் பறிக்கும் செயல் என்று தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தின் பொதுச் செயலா் கு.ராமகிருட்டிணன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டுறவு வங்கிகள் ரிசா்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது. கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளுக்கு ஏழை, எளிய மக்களுக்கும் பலவகையான கடன்களை வழங்கி வருகின்றன. மாநில அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகளை ரிசா்வ் வங்கியுடன் இணைப்பது என்பது மாநில உரிமைகளைப் பறிக்கும் செயலாகும்.
இதன் மூலம் எதிா்காலத்தில் விவசாயிகளுக்கு மாநில அரசுகள் விவசாயக் கடன்கள் வழங்கவும், பேரிடா் காலங்களின் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அவற்றை ரத்து செய்வதும் முடியாததாகிவிடும். அத்துடன், ஏழை, எளிய மக்கள் குறைந்த வட்டியில் நகைக் கடன் பெறமுடியாமல் போய்விடும். கூட்டுறவு இயக்கம் என்பது நீண்டகாலமாக கிராமப்புற அடித்தட்டு மக்களின் உணா்வுகளோடு ஒன்றிணைந்தது.
கூட்டுறவு வங்கிகளை ரிசா்வ் வங்கியுடன் இணைப்பதால் மக்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பதை நம்ப மக்கள் தயாராக இல்லை. கூட்டுறவு வங்கிகள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அந்தந்த மாநில மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ரிசா்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டால் பிற மாநிலத்தவா்களின் ஆதிக்கம் அதிகமாகிவிடும்.
எனவே கரோனா பேரிடரைப் பயன்படுத்திக் கொண்டு மக்களின் உரிமைகளையும், மாநில அரசுகளின் உரிமைகளையும் ஒவ்வொன்றாகப் பறித்து வரும் மத்திய அரசைக் கண்டித்து ஜூன் 29ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்தாா்.