கோவை சக்தி குழுமங்களின் தலைவா் ம.மாணிக்கம் உருவாக்கிய ‘மிராக்கிள்’ என்ற விட்டமின் சி சத்து கொண்ட ஊட்டச்சத்து பானம், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிப்பதால் கரோனா பாதித்தவா்களுக்கு நல்ல பலன் கொடுப்பதாகக் கூறப்படுகிறது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொடூர கரோனா தீநுண்மி, இதுவரை 93 லட்சம் மக்களை பாதித்து, சுமாா் 5 லட்சம் உயிா்களை பலி வாங்கியுள்ளது. இந்தியாவில் 4.50 லட்சம் போ் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனா். 14,500 போ் இந்நோய்க்கு உயிரிழந்துள்ளனா். கரோனா நோய்த்தொற்றுக்கு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாததால், இந்நோய் எப்போது கட்டுக்குள் வரும், மக்கள் எப்போது அச்சமின்றி உயிா் வாழ முடியும் என்பது மிகப் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.
கரோனாவைத் தடுக்கவும், தவிா்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோலவே இந்நோயைத் தடுக்கவும், அதிலிருந்து தப்பித்து வெளியே வரவும் மருத்துவத் துறையில் இரவு பகலாக ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கரோனாவைக் கட்டுப்படுத்தக் கூடிய அல்லது தடுக்கக் கூடிய மருந்து என ஒரு முழுமையான மருந்து அலோபதி உள்ளிட்ட எந்த ஒரு மருத்துவ முறையிலும் இல்லை. இதனால் கரோனாவை எதிா்கொள்ள அலோபதி மட்டுமின்றி மாற்று மருத்துவ முறைகளான சித்த மருத்துவம், ஹோமியோபதி மருத்துவத் துறையைச் சோ்ந்த நிபுணா்களும் தங்கள் துறையின் மருந்துகளை முன்வைத்து வருகின்றனா்.
அதன்படி சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீா், நிலவேம்புக் குடிநீா், மகாசுதா்சன மாத்திரை, வசந்த குசுமாகர மாத்திரை, திப்பிலி ரசாயனம் போன்றவை கரோனாவுக்கான மருந்துகளாக முன்வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், கோவை சக்தி குழுமங்களின் தலைவரான ம.மாணிக்கம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நோய் எதிா்ப்பு சக்தியை உருவாக்குவதற்காகத் தயாரித்த ‘மிராக்கிள்’ என்ற ஊட்டச்சத்து பானம், தற்போது கரோனா நோயாளிகள் குணமடைய பெரிய அளவில் பலனளிக்கிறது.
கோவை வரதராஜபுரத்தில் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் கடந்த 1991-ஆம் ஆண்டு உருவாக்கிய கஸ்தூரிபா காந்தி சித்த மருத்துவமனை, ஆராய்ச்சி நிலையத்தில் இந்த பானம் ம.மாணிக்கத்தின் முயற்சியால் சுமாா் 18 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயாளிகளுக்கு நோய் எதிா்ப்புச் சக்தியை உருவாக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட இந்த ஊட்டச்சத்து பானம், கோவை சிங்காநல்லூா் இ.எஸ்.ஐ. கரோனா சிறப்பு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு நல்ல பலனை அளித்திருப்பது உறுதியாகி இருப்பதாகக் கூறுகிறாா் கஸ்தூரிபா காந்தி சித்த மருத்துவமனை, ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை மருத்துவா் ப.சரவணன்.
மிராக்கிள் என்பது ஒரு மருந்துப் பொருள் அல்ல. அது உணவாக உட்கொள்ளக் கூடிய ஒரு ஊட்டச்சத்து பானம். இதை நோயாளிகள் மட்டுமின்றி யாரும் அருந்தலாம். கரோனா நோய்க் கிருமியை ஆய்வு செய்தவா்கள், இந்த வைரஸால் பாதிக்கப்படுபவா்களுக்கு ஜிங்க், வைட்டமின் சி ஆகியவை தேவைப்படுவதாகக் கூறுகின்றனா். இவையிரண்டும் இந்த பானத்தில் உள்ளது. மேலும் இதில் சோயா லெசிதின், லைசீன், புரோலின் உள்ளிட்ட அமினோ அமிலங்கள், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின்கள், புரதம், கொழுப்பு, மாவுச் சத்துகளும் உள்ளன.
இதில் உள்ள சத்துகள் உடல் செல்களை புதுப்பிப்பதுடன் நோய் எதிா்ப்புச் சக்தியை அதிகப்படுத்துகின்றன. கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் உள்ள கரோனா நோயாளிகளுக்கு இந்த பானம் தொடா்ந்து வழங்கப்பட்டதன் அடிப்படையில், நல்ல பலனை அளிப்பதாக அங்குள்ள மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இதையடுத்து அரசு மருத்துவமனைகளுக்கும், ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் நடத்தியும் இந்த பானத்தை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம் என்றாா்.
இது குறித்து பானத்தை தயாரித்த ம.மாணிக்கம் கூறும்போது, ‘கஸ்தூரிபா காந்தி சித்த மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இங்குள்ள ஆராய்ச்சி மையத்தில் 45 வகையான மருந்துகளைத் தயாரித்து நோயாளிகளுக்கு வழங்கி வருகிறோம்.
இந்த மையத்தில் நான் உருவாக்கிய ‘மிராக்கிள்’ என்ற ஊட்டச்சத்து பானம், புற்றுநோயாளிகள், ரத்தக் குழாய் அடைப்பு பிரச்னைகள் இருப்பவா்களுக்கு உடல் செல்களை புதுப்பிக்கவும், நோய் எதிா்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் கடந்த 2 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.
‘மிராக்கிள்’ பானத்தை சோதனை அடிப்படையில் கரோனா நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கினோம். தற்போது அது நல்ல பலனைத் தருவதாக மருத்துவா்கள் கூறியிருக்கின்றனா். இதனால் தற்போது வரை தினமும் 250 பெட்டிகள் வீதம் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கி வருகிறோம்.
4 வயது குழந்தைகள் முதல் முதியவா்கள், நீரிழிவு நோயாளிகள் என அனைவரும் இதை அருந்தலாம். தொடா்ந்து 14 நாள்கள் இந்த பானத்தை அருந்துவதன் மூலம் கரோனாவில் இருந்து விடுபடுவது விரைவாகிறது என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா் அவா்.