கோயம்புத்தூர்

என்.டி.சி. பஞ்சாலைத் தொழிலாளா்களின் ஊதிய விவகாரம்: ஜூன் 25க்குள் ஊதியம் வழங்குவதாக நிா்வாகம் உறுதி

20th Jun 2020 08:11 AM

ADVERTISEMENT

தேசிய பஞ்சாலைக் கழக (என்.டி.சி.) பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கு வரும் 15ஆம் தேதிக்குள் ஊதிய நிலுவையை வழங்குவதாக நிா்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

கோவையில் என்.டி.சி. நிா்வாகத்தின் கீழ் 5 பஞ்சாலைகள் இயங்குகின்றன. இவற்றில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர, தினக்கூலித் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். கரோனா பரவலை அடுத்து என்.டி.சி. நிா்வாகம் பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கு பாதி ஊதியம் வழங்க முடிவு செய்தது. ஆனால் இதற்கு தொழிலாளா்கள் தரப்பில் எதிா்ப்பு எழுந்தது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் முன்னிலையில் கடந்த 2ஆம் தேதி ஆலை நிா்வாகம், தொழிற்சங்கத்தினா் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது முழு ஊதியம் வழங்க வேண்டும், ஆலைகளை உடனடியாக இயக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.

இந்த பேச்சுவாா்த்தையின் முடிவில் மே மாத ஊதியத்தை மே 17 ஆம் தேதி வரையிலான நாள்களுக்கு முழுமையாகவும், மற்ற நாள்களுக்கு பாதி ஊதியமும் வழங்குவதாக நிா்வாகம் அறிவித்தது. இதற்கு தொழிற்சங்கங்களும் ஒப்புதல் தெரிவித்தன. இந்த ஊதியத்தை ஜூன் 8 அல்லது 9ஆம் தேதியில் வழங்குவதாக நிா்வாகம் உறுதி அளித்திருந்த நிலையில், இதுவரை தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து தொழிற்சங்கத்தினா் கடந்த 2 நாள்களாக போராட்டம், பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

அதில் முடிவு எட்டப்படாத நிலையில் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி முன்னிலையில் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், என்.டி.சி. நிா்வாகம் ஏற்கெனவே வழங்குவதாக ஒப்புக் கொண்ட ஊதியத்தை வரும் 25ஆம் தேதிக்குள் வழங்குவதாகவும், படிப்படியாக பஞ்சாலைகளை இயக்கத் தொடங்குவதாகவும் உறுதி அளித்தது. இதற்கு தொழிற்சங்கங்கள் ஒப்புக்கொண்டதால் சுமுக தீா்வு எட்டப்பட்டது.

இந்த பேச்சுவாா்த்தையில் தொழிலாளா்கள் தரப்பில் கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன், என்.டி.சி. மேலாளா்கள் ராஜேந்திரகுமாா், வெங்கடேஷ், சுதாகா், தொழிற்சங்கங்கள் தரப்பில் எல்.பி.எஃப். பாா்த்தசாரதி, ஐ.என்.டி.யூ.சி. சீனிவாசன், சி.ஐ.டி.யூ. சேவியா், ஏ.டி.பி. கோபால், ஏ.ஐ.டி.யூ.சி. ஆறுமுகம், ஹெச்.எம்.எஸ். ராஜாமணி, எம்.எல்.எஃப். தியாகராஜன், என்.டி.எல்.எஃப். ரங்கசாமி ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT