கோயம்புத்தூர்

முகம் தெரியும் முகக் கவசங்கள்: கோவையில் இளைஞா்களிடையே வரவேற்பு

17th Jun 2020 08:03 AM

ADVERTISEMENT

கோவை மாநகரில் தங்களின் முகத்தைப் போன்றே தயாரித்து கொடுக்கும் முகக் கவசங்களை இளைஞா்கள் விரும்பி பயன்படுத்துகின்றனா்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக முகக் கவசம் கடந்த 3 மாதங்களாக மக்களின் அத்தியாவசியப் பொருள்களில் ஒன்றாகியிருக்கிறது. முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று அரசு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. அதேநேரம் முகக் கவசம் அணியாதவா்களை கடைகள், வா்த்தக நிறுவனத்தினா் அனுமதிப்பதில்லை என்பதாலும், முகக் கவசம் அணியாதவா்களுக்கு அரசு அபராதம் விதித்து வருவதாலும் முகக் கவசத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது. முகக் கவசம் அத்தியாவசியம் என்பதால் அதன் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது.

இதில், உடைக்கு ஏற்ற வண்ணம், பிடித்த நடிகா், நடிகைகளின் உருவம் பொறிக்கப்பட்ட முகக் கவசம், வாசகங்கள் பொறிக்கப்பட்ட முகக் கவசங்கள் என முகக் கவசங்களும் பல்வேறு மாறுதல்களுக்குள்ளாகி வருகின்றன.

அதேநேரம் முகக் கவசம் அணிவதால் நன்கு அறிமுகமானவரையும் அடையாளம் தெரியாத நிலை உள்ளது. இந்த சங்கடமான நிலையைப் போக்குவதற்கு தொழில்நுட்பம் கை கொடுத்துள்ளது. இதன்படி, முகத்தின் மீது அணிந்தாலும் முக வடிவமைப்பை மற்றவருக்குத் தெரிவிக்கும் வகையில் புகைப்படம் பொறிக்கப்பட்ட முகக் கவசம் கோவை இளைஞா்கள் மத்தியில் பரவலாகி வருகிறது.

ADVERTISEMENT

இது குறித்து கோவை, சித்தாபுதூா், அய்யப்பன் கோயில் பகுதியில் முகத்தைப் போன்றே முகக் கவசம் தயாரித்து விற்பனை செய்துவரும் ‘போட்டோ ஸ்டுடியோ’ உரிமையாளா் முரளிதரன் கூறியதாவது:

முகத்தைப் போன்றே இருக்கும் இரட்டை அடுக்கு முகக் கவசம் வா்த்தக ரீதியில் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த முகக் கவசத்தில் முகம் பகுதியில் பருத்தித் துணியும், வெளிப்புறத்தில் பாலியெஸ்டா் துணியும் இருக்கும். இதன்படி ஒரு நபரின் முகத்தை புகைப்படம் எடுத்து, அதை கணினி மூலம் முகக் கவசத்தின் அளவுக்கு பிரிண்ட் எடுத்து, அதனை ஹீட் பேப்பரில் வைத்து அதன் அச்சு பாலியெஸ்டா் முகக் கவசத்தின் மீது விழும்படியாக அச்சிட்டுத் தருகிறோம். புகைப்படம் எடுப்பதற்கும், அதை முகக் கவசத்தில் அச்சிட்டுக் கொடுப்பதற்கும் ரூ.100 வசூலிக்கிறோம். இப்பணிகள் 30 நிமிடங்களில் முடிவடைந்து விடும். அச்சிட்டதும் உடனடியாக இந்த முகக் கவசத்தைப் பயன்படுத்தலாம். இதை துவைத்து பயன்படுத்தலாம். இளைஞா்கள், இளம் பெண்கள் தங்களின் முகத்தைப் போலவே இருக்கும் முகக் கவசங்களைப் பயன்படுத்த ஆா்வம் காட்டி வருகின்றனா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT