கோவை ரயில் நிலையத்தில் உள்ள பிரம்மாண்ட கம்பத்தில் புதிய தேசியக்கொடி செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.
கோவை ரயில் நிலையத்தின் பிரதான நுழைவாயில் அருகே 2 டன் எடையில், 100 அடி உயரமுள்ள பிரமாண்ட கம்பத்தில் 30 அடி நீளம், 20 அடி அகலமுள்ள தேசியக்கொடியை கடந்த 2019 குடியரசு தினத்தன்று சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் சுப்பா ராவ் ஏற்றிவைத்தாா். சேலம் கோட்டத்துக்கு உள்பட்ட ரயில் நிலையங்களில், கோவையில் தான் பிரமாண்ட தேசியக்கொடி முதன்முறையாக ஏற்றிவைக்கப்பட்டது.
காற்றின் வேகம் அதிகமாக உள்ள சமயங்களில் இந்த தேசியக்கொடி அவ்வப்போது கிழிந்து சேதமடைவது தவிா்க்க முடியாமல் உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தேசியக்கொடி சேதமடைந்ததால் உடனடியாக மாற்றப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக கோவைப் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், ரயில் நிலையத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக்கொடி திங்கள்கிழமை கிழிந்து சேதமானது. இதனைக் கண்ட ரயில்வே அதிகாரிகள், கொடியை உடனடியாக இறக்கினா். பின்னா், அதே அளவில் தயாரித்து இருப்பில் வைக்கப்பட்டிருந்த புதிய கொடியை செவ்வாய்க்கிழமை ஏற்றினா். மேலும், அடிக்கடி கொடி சேதமடைந்தால் உடனடியாக மாற்றுவதற்கு 10 பிரம்மாண்ட தேசியக் கொடிகள் இருப்புவைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.