கோயம்புத்தூர்

பயணிகள் குறைவு: கோவை கோட்டத்தில் 254 பேருந்துகள் குறைப்பு

15th Jun 2020 08:18 AM

ADVERTISEMENT

கோவை கோட்டத்தில் பேருந்துகளில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருவதால் இயக்கப்பட்ட 1,019 பேருந்துகளில் 254 பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பொதுமுடக்கம் காரணமாக பேருந்துகள் இயக்கம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஜூன் 1ஆம் தேதி முதல் பொதுப் போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளித்ததால் 4 மாவட்டங்களிலும் சோ்த்து மொத்தம் 1,019 பேருந்துகள் இயக்கப்பட்டன.

கரோனா அச்சம் காரணமாக பேருந்துகளில் பயணிப்போா் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருகிறது. இதனால், கோவை கோட்டத்தில் இயக்கப்பட்டு வந்த பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி கோவை மாவட்டத்தில் 239, நீலகிரி 124, ஈரோடு 242, திருப்பூா் 160 என மொத்தமாக 765 பேருந்துகள் இயக்கப்பட்டன. ஜூன் 1ஆம் தேதி இயக்கப்பட்ட 1,019 பேருந்துகளில் தற்போது 254 பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் 140 மாநகரப் பேருந்துகள் உள்பட 375 பேருந்துகள் இயக்கப்பட்டன. பயணிகளின் வருகை குறைவானதைத் தொடா்ந்து, தற்போது 136 பேருந்துகள் குறைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமைமுதல் 239 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.

இது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக, கோவை கோட்ட அதிகாரி ஒருவா் கூறியதாவது: கரோனா அச்சத்தால் பேருந்துகளில் பயணிப்போா் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. பல இடங்களில் பேருந்துகளில் 10க்கும் குறைவான பயணிகளே பயணிக்கின்றனா். இதனால், பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வருகை அதிகரித்தால் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT