கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம் அருகே முள் வேலியில் சிக்கிய சிறுத்தை

14th Jun 2020 02:53 PM

ADVERTISEMENT

மேட்டுப்பாளையம் அருகே விவசாய நிலத்தில் முள் வேலியில் சிக்கிய சிறுத்தையை நான்கு மணி நேரம் போராடி வனத்துறையினர் மீட்டனர்.  

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட அறிவொளி நகர், சென்னாமலை கரடு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு அருகிலுள்ள வனப்பகுதியில் இருந்து கரடி, சிறுத்தை, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு மற்றும் விளை நிலங்களுக்குள் நுழைந்து பொதுமக்களையும், விவசாயிகளின் அவ்வப்போது அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அறிவொளி நகர் சென்னாமலை கரடு பகுதியிலுள்ள சக்திவேல் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தின் வழியாக சிறுத்தை வந்து அங்கிருந்து நீலகிரி மில் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்திற்குள் செல்ல முயற்சித்து உள்ளது. 

அப்போது விளைநிலத்தில் தாவி குதிக்க முயன்ற போது பாதுகாப்பிற்காக போடப்பட்டிருந்த முள் வேலியில் சிக்கி படுகாயம் அடைந்தது. அப்போது தோட்டத்தில் பராமரிப்பு பணிக்காக வந்திருந்த விவசாயிகள் சிறுத்தையின் சத்தம் கேட்டு பார்த்தனர். அங்குள்ள புதரில் சிறுத்தை படுகாயமடைந்து நடக்கமுடியாமல் முள் வேலியில் சிக்கிக் கொண்டு இருந்ததை பார்த்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளை சேர்ந்த வனத்துறையினர் வரவழைக்கப்பட்டு சிறுத்தையை பார்வையிட்டனர். 

ADVERTISEMENT

அதன்பின் கால்நடை மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி அதனை தனியாக ஒரு கூண்டில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து சிறுத்தை விவசாய தோட்டத்திற்குள் வலையில் சிக்கிய சம்பவம் சுற்று வட்டார மக்களுக்கு தெரியவர அப்பகுதியில் பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் திரண்டினர். இதையடுத்து பொதுமக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் சார்பில் போலீசார் வரவழைக்கப்பட்டனர். பின்னர் சிறுத்தையை சுமார் 4 மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் மயக்க ஊசி செலுத்தி கூண்டிற்கு எடுத்து வந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Mettupalayam leopard coimbatore மேட்டுப்பாளையம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT