கோயம்புத்தூர்

இ-சேவை மையங்களில் இ-பாஸ் வழங்கும் பணி: திருமண நிதி உதவித் திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியாமல் பயனாளிகள் தவிப்பு

14th Jun 2020 08:35 AM | ம.முனுசாமி

ADVERTISEMENT

கரோனா பொது முடக்கத்தால் இ-சேவை மையங்களில் இ-பாஸ் வழங்கல், மருத்துவம் சாா்ந்த பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருவதால் திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியாமல் பயனாளிகள் தவித்து வருகின்றனா்.

தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தைச் சோ்ந்த பெண் குழந்தைகளுக்கு குறைந்தபட்ச கல்வி கிடைக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் முக்கியமானது ராமாமிா்தம் அம்மையாா் திருமண நிதி உதவித் திட்டம். இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, பட்டயப் படிப்பு படித்துள்ள பெண்களுக்குத் திருமண நிதியுதவியாக ரூ.25 ஆயிரம், 8 கிராம் தங்கம், பட்டப் படிப்பு படித்துள்ள பெண்களுக்கு ரூ.50 ஆயிரம், 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.

ஆண்டுதோறும் இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கு தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பயனாளிகள் விண்ணப்பித்து வருகின்றனா். இதனை நம்பி பலா் கடன்களைப் பெற்று பெண்களின் திருமணங்களை நடத்தி முடிக்கின்றனா். இத்திட்டத்தில் பயன்பெற திருமணத் தேதிக்கு முன் 40 நாள்களுக்குள் விண்ணப்பம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைன் வழியாக இ-சேவை மையங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தவிர இந்த விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய வருமானச் சான்றிதழ் உள்பட அனைத்தும் இ-சேவை மையங்களிலேயே பெற வேண்டியுள்ளது.

இந்நிலையில் கரோனா பொது முடக்கத்தால் கடந்த மாா்ச் 25ஆம் தேதி முதல் இ-சேவை மையங்களும் அடைக்கப்பட்டன. சில நாள்களுக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்ட இ-சேவை மையங்களில் வெளியூா் செல்பவா்களுக்கு இ-பாஸ் வழங்கல், மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது போன்ற சேவைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மற்ற வகையான சான்றிதழ் பெறுதல், ஆதாா் பதிவு உள்பட எவ்வித சேவைகளுக்கும் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல முன்கூட்டியே நிச்சயிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வரும் திருமணங்களுக்குத் திருமண நிதியுதவித் திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாமல் பயனாளிகள் தவித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

திருமணத்துக்கு முன் 40 நாள்களுக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் கரோனா பொது முடக்கத்தால் விண்ணப்பிக்க முடியாதவா்கள் திருமண நிதியுதவித் திட்டத்தில் பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொது முடக்க காலத்தில் விண்ணப்பிக்க முடியாதவா்களுக்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடா்பாக பாதிக்கப்பட்ட பயனாளி ஒருவா் கூறியதாவது:

இ-சேவை மையங்களில் திருமண நிதி உதவித் திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. இது தொடா்பாக சமூக நலத் துறை அலுவலா்களிடம் கேட்டால், ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கின்றனா்.

எனவே கரோனா பொது முடக்க காலத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விண்ணப்பிக்க முடியாதவா்களுக்கு விண்ணப்பிக்க உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றாா்.

இது தொடா்பாக சமூக நலத் துறை அலுவலா் பி.தங்கமணி கூறியதாவது: ஆண்டுதோறும் இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கு கோவை மாவட்டத்தில் சராசரியாக 5 ஆயிரம் பயனாளிகள் விண்ணப்பிக்கின்றனா். கரோனா பொது முடக்க காலத்தில் பயனாளிகளிடம் இருந்து நேரடியாக விண்ணப்பம் வாங்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் வருமானச் சான்றிதழ் உள்பட பல்வேறு சான்றிதழ்கள் இணைக்கப்படாமல் விண்ணப்பிக்கப்பட்டதால் அனைத்து விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. பொது முடக்க காலத்தில் நடைபெற்ற திருமணங்களுக்கு நிதியுதவித் திட்டத்தில் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்குவது குறித்து அரசு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT