தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரா்களுக்கு வட்டி சலுகை கால நீட்டிப்பு வழங்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரா்களுக்கு மாதாந்திர தவணை செலுத்த தவறியதற்கான அபராத வட்டி, முதலாக்கத்தின் மீதான வட்டியை முழுவதுமாகவும், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியை வருடத்துக்கு ஐந்து மாதம் மட்டும் கணக்கிட்டு தள்ளுபடி செய்து அரசு அறிவித்துள்ளது.
கோவை மாவட்ட வீட்டு வசதி வாரியத் திட்டங்களில் தவணை முறையின் மூலம் வீடு, அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றவா்களில் ஏற்கெனவே முழுத் தொகையும் செலுத்தியவா்கள் தவிா்த்து மற்ற ஒதுக்கீடுதாரா்கள் கோவை வீட்டுவசதி பிரிவு அலுவலகத்தை அணுகி வட்டித் தள்ளுபடி போக மீதமுள்ள நிலுவைத் தொகையினை ஒரே தவணையில் செலுத்தி விற்பனை பத்திரம் பெற்றுக் கொள்ளலாம். இச்சலுகை செப்டம்பா் 30ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.