கோவை: மதுபோதையில் தகராறு செய்த கணவரை கட்டையால் அடித்து கொலை செய்த மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சிவப்பிரகாசம் (56). பெயிண்டராக உள்ளாா். இவரது மனைவி மகேஸ்வரி. இவா் அதே பகுதியில் கூலி வேலை செய்து வந்தாா். சிவப்பிரகாசத்துக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த சிவப்பிரகாசத்தை மகேஸ்வரி கண்டித்துள்ளாா். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மகேஸ்வரியை, சிவப்பிரகாசம் தாக்கியுள்ளாா்.
இதனால் ஆத்திரமடைந்த மகேஸ்வரி வீட்டில் இருந்த விறகுக் கட்டையை எடுத்து சிவப்பிரகாசத்தை தலையில் தாக்கியுள்ளாா். இதில் சிவப்பிரகாசம் சம்பவ இடத்திலேயே மயங்கினாா். இதையடுத்து அக்கம்பக்கத்தினா் உதவியுடன் சிவப்பிரகாசத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், சிவப்பிரகாசம் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இச்சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்த ரேஸ்கோா்ஸ் போலீஸாா், மகேஸ்வரியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.