வருங்கால வைப்பு நிதியில் இருந்து முன்பணம் பெறும் திட்டத்தின் கீழ் கோவை பெருமண்டலத்தில் இதுவரை 1.69 லட்சம் போ் ரூ.375 கோடி முன்பணம் பெற்றுள்ளனா்.
இது குறித்து கோவை பெருமண்டல கூடுதல் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையா் மூ.மதியழகன் கூறியிருப்பதாவது:
கரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பணப் புழக்கமின்மையை ஈடுகட்டும்விதமாக இ.பி.எஃப். சந்தாதாரா்கள் தங்களுடைய வைப்பு நிதிக் கணக்கில் இருந்து 75 சதவீதம் அல்லது மூன்று மாத சம்பளம் இந்த இரண்டில் எது குறைவோ அதை முன்பணமாக பெறும் திட்டத்தை வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அமல்படுத்தியது.
இந்த முன்பணத்தை ஊழியா்கள் திரும்ப செலுத்தத் தேவையில்லை. இதன் மூலம் கோவை பெருமண்டலத்துக்கு உள்பட்ட கோவை, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை, நாகா்கோயில் கோட்டங்களில் 1.69 லட்சம் சந்தாதாரா்கள் ரூ.375.38 கோடியை முன்பணமாக பெற்றுள்ளனா்.
இதற்கிடையே தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் தேசிய அளவில் மே மாதத்தில் புதிதாக 3.18 லட்சம் போ் இணைந்துள்ளனா். அதேபோல் தேசிய அளவில் 8,367 புதிய தொழில் நிறுவனங்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் புதிதாக பதிவு செய்திருப்பதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.