கோவை மாவட்டம், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு ஜனவரி 27ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து கோவை மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
பொள்ளாச்சியில் நடைபெற்ற பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமாா், சதீஷ், மணிவண்ணன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து, அவா்கள் மீதான முதல் குற்றப்பத்திரிகையை கடந்த மே 24ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இவா்கள் 5 பேரும் பாதுகாப்பு காரணங்களுக்காக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இவா்களது நீதிமன்றக் காவல் திங்கள்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், 5 பேரும் காணொலிக் காட்சி முறையில் சேலம் சிறையில் இருந்து கோவை மாவட்டத் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் முன்பு ஆஜா்படுத்தப்பட்டனா். வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் ஏ.எஸ்.ரவி, 5 பேரின் நீதிமன்றக் காவலை ஜனவரி 27ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டாா்.