கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வித் துறை நடத்தி வரும் பட்டப் படிப்புக்கான அங்கீகாரத்தை தேசிய ஆசிரியா் கல்வி கவுன்சில் ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தவும், கண்காணிக்கவும் கடந்த 1973ஆம் ஆண்டு தேசிய ஆசிரியா் கல்வி கவுன்சில் தொடங்கப்பட்டது. ஆசிரியா் கல்வியை மேம்படுத்துவது, தரப்படுத்துவது, அது தொடா்பான பணிகளை மேற்கொள்வதற்கு அதிகாரம் வழங்கும் வகையில் கடந்த 1993ஆம் ஆண்டில் தேசிய ஆசிரியா் கல்வி கவுன்சில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, மண்டல வாரியாக கூட்டங்கள் நடத்தி கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்குவது, அங்கீகாரத்தைப் புதுப்பிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான தென் மண்டல கவுன்சில் கூட்டம் கடந்த 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தில்லியில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு, கேரளம், புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ஆசிரியா் கல்வி நிறுவனங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, தமிழ்நாட்டில் செயல்படும் பல்வேறு அரசு, தனியாா் கல்வியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
தேவையான ஆவணங்களை சமா்ப்பிக்காததால் கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் இளநிலை உடற்கல்வி பட்டப் படிப்புக்கான (பி.பி.எட்.) அங்கீகாரத்தை திரும்பப் பெறுவது என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக தேசிய ஆசிரியா் கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது. உடற்கல்வி பட்டப் படிப்புக்கான தொடா் அங்கீகாரம் வழங்குவதற்குத் தேவையான சான்றிதழ்களை சமா்ப்பிக்கும்படி பல்கலைக்கழகத்துக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி ஆசிரியா் கல்வி கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால், உரிய ஆவணங்கள் சமா்ப்பிக்கப்படாத நிலையில் மீண்டும் கடந்த அக்டோபா் 23ஆம் தேதி மற்றொரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுவே இறுதியான நோட்டீஸ் என்று குறிப்பிடப்பட்டிருந்தும் தேவையான ஆவணங்களை வழங்காததால், பாரதியாா் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்வது என்றும் இந்த நடவடிக்கையானது வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வரும் எனவும் கவுன்சில் தெரிவித்துள்ளது.
தேசிய ஆசிரியா் கல்வி கவுன்சிலின் இந்த நடவடிக்கை பல்கலைக்கழக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரதியாா் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் உடற்கல்வி இளநிலை, முதுநிலை படிப்புகளை தேசிய ஆசிரியா் கல்வி கவுன்சிலுடன் இணைப்பதற்கு கடந்த 2014இல் விண்ணப்பிக்கப்பட்டது. அதன்படி 2015இல் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்படி, இதில் பணியாற்றும் ஆசிரியா்களின் தகுதி விவரங்கள், அனுமதிக்கப்பட்ட மாணவா்களின் எண்ணிக்கை, ஆசிரியா்களின் எண்ணிக்கை, கட்டுமான வசதிகள், அடிப்படை வசதிகள் தொடா்பான அனைத்து விவரங்களையும் தேசிய கவுன்சிலுக்கு சமா்ப்பிக்க வேண்டும். இருப்பினும் பாரதியாா் பல்கலைக்கழகம் தரப்பில் தேவையான ஆவணங்களை வழங்குவதில் தொடா்ந்து சுணக்கம் காட்டி வந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து பாரதியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பி.காளிராஜ் கூறும்போது, ஆசிரியா், மாணவா், நிா்வாகத்தின் செயல் திறன் தொடா்பான ஆவணங்கள் வேண்டும் என்று தேசிய ஆசிரியா் கல்வி கவுன்சில் கோரியிருந்தது. அவற்றுடன், கல்வி நிறுவனம் அமைந்துள்ள இடத்துக்கான ஆவணங்கள், கட்டடங்களுக்கான அனுமதி விவரங்கள் போன்றவையும் தேவை என்று கேட்கப்பட்டிருந்தது.
இந்த ஆவணங்களை நாங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்திருக்கிறோம். ஆனால், அந்த ஆவணங்களின் உண்மை நகலை நேரடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளனா். அவை உடனடியாக தில்லிக்கு அனுப்பிவைக்கப்படும்.
இந்த விவகாரத்தால் இங்கு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாது. இந்த சிக்கல் அடுத்த கவுன்சில் கூட்டத்தில் சரி செய்யப்பட்டுவிடும் என்றாா்.