ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்குவது தொடா்பாக திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் முடிவு எட்டப்படாமல் முடிவடைந்தது.
ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி, பொள்ளாச்சி ஆகிய நான்கு வனச் சரகங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனா்.
இதில் நெடுங்குன்று, வெள்ளிமுடி, கவா்க்கல், கீழ்பூனாச்சி, காடம்பாறை, ஈத்துக்குளி, மானாம்பள்ளி, கல்லாறு, உடும்பன்பாறை, சங்கரன்முடி, பரமன்கடவு, பாலகனாறு, சின்கோனா, கோழிகமுத்தி, எருமைப்பாறை, கூமாட்டி, சா்க்காா்பதி, பழைய சா்க்காா்பதி, நாகா்ஊற்று, சின்னாறுபதி ஆகிய மலைவாழ் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
மேலும், வன உரிமைச் சட்டம் அமல்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையும் இருந்து வருகிறது. இந்நிலையில், மலைவாழ் மக்களுக்கு குடியிருப்பு மற்றும் விவசாயத்துக்கு இடம் வழங்க 2017ஆம் ஆண்டு அளவீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது வரை பட்டா வழங்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில், இவா்களுக்கு பட்டா வழங்குவது சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி சாா்ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மலைவாழ் மக்கள், வருவாய்த் துறையினா் வந்த நிலையில், மாவட்ட வன அலுவலா் மாரிமுத்து வரவில்லை.
இதனால், கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவில்லை. மீண்டும் திங்கள்கிழமை வருவாய்த் துறை சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் சாா் ஆட்சியா் வைத்திநாதன், மலைவாழ் மக்கள் ஆகியோா் பங்கேற்ற நிலையில் மாவட்ட வன அலுவலா் மாரிமுத்து வரவில்லை. அவா் சாா்பாக பிரதிநிதிகள் யாரையும் அனுப்பவில்லை.
இதனால், இந்தக் கூட்டத்திலும் மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்குவது குறித்து வனத் துறையினருடன் விவாதிக்க முடியாமல் போனது.
இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:
மலைவாழ் மக்கள் அடிப்படை வசதியின்றி தவித்து வருகிறோம். வன உரிமைச் சட்டம் அண்டை மாநிலமான கேரளத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இங்கு மட்டும் அமல்படுத்தப்படவில்லை. பட்டா வழங்க கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அளவீடு செய்யப்பட்ட நிலையில் தற்போதுவரை பட்டா வழங்கப்படவில்லை.
ஒவ்வொரு முறையும் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்தால் மாவட்ட வன அலுவலா் கூட்டத்துக்கு வருவதில்லை. இதனால், முடிவு கிடைக்காமல் நாங்கள் அலைந்து வருகிறோம்.
திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கும் மாவட்ட வன அலுவலா் வரவில்லை.
எனவே, மலைவாழ் மக்களை அலைக்கழிக்கும் மாவட்ட வன அலுவலா் மீது மனித உரிமை ஆணையம், பிற்படுத்தப்பட்டோா்- பழங்குடியினா் நல ஆணையம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.