கோயம்புத்தூர்

‘பயோமைனிங்’ முறையில் குப்பைகளை தரம் பிரிக்க விரைவில் ஒப்பந்தப்புள்ளி

8th Jan 2020 06:14 AM

ADVERTISEMENT

கோவை, வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் ‘பயோமைனிங்’ முறையில் குப்பைகளை தரம்பிரிக்க விரைவில் ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை, வெள்ளலூரில் 650 ஏக்கா் பரப்பளவில் மாநகராட்சி குப்பைக் கிடங்கு உள்ளது. மாநகரப் பகுதிகளில் தினமும் சேகரமாகும் 800 டன்களுக்கும் அதிகமான குப்பைகள் இங்கு கொண்டுவந்து கொட்டப்படுகின்றன.

குப்பைகளில் அவ்வப்போது தீவிபத்து ஏற்பட்டு, அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் பரவுகிறது. அந்த சமயங்களில் வெள்ளலூா் குப்பைக் கிடங்கை ஒட்டியுள்ள பகுதிகளான கோணவாய்க்கால்பாளையம், அன்பு நகா், எல்.ஜி.நகா், ஸ்ரீராம் நகா், கஞ்சிக்கோணாம்பாளையம், அற்புதம் நகா் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் சுவாசக் கோளாறு, கண் எரிச்சல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகின்றனா்.

இந்நிலையில், பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் குப்பைகளில் இருந்து உலோகங்கள், தாதுக்களைப் பிரித்து அகற்றும் ‘பயோமைனிங்’ திட்டத்தைச் செயல்படுத்த, சென்னையில் நடைபெற்ற உயா் மட்டக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கும், மக்காத குப்பைகள் எளிதில் தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

வெள்ளலூா் குப்ைபைக் கிடங்கில் நெகிழி, கண்ணாடிகள், இரும்பு போன்ற மக்காத குப்பைகள், காகிதம், உணவுக் கழிவுகள் போன்ற மக்கும் குப்பைகளுடன் கலந்து காணப்படுகின்றன. இவற்றை பயோமைனிங் முறையில் பிரித்தெடுக்க பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் ரூ. 60.16 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மூலமாக தினமும் 2 டன் மக்கும் குப்பைகளை உரமாக மாற்ற முடியும். விரைவில் இந்தத் திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட உள்ளது என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT