கோவை, சுந்தராபுரம் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள தனியாா் வணிக வளாக கட்டடத்தை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.
கோவை - மேட்டுப்பாளையம் நடூா் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான சுற்றுச்சுவா் இடிந்து விழுந்த விபத்தில் 17 போ் உயிரிழந்தனா். இதையடுத்து கோவை மாநகராட்சி பகுதிகளில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்கள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில் கோவை தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட சுந்தராபுரம், குறிச்சி, குனியமுத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை இடிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் அறிவிப்பாணை வழங்கி வருகின்றனா்.
ஒரு சில கட்டடங்கள் அதிகாரிகளால் இடித்து அகற்றப்பட்டன. இந்நிலையில் சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் சில கட்டடங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால், அதனை இடித்து அகற்ற வேண்டும் அல்லது பாதுக்காப்பை உறுதி செய்ய வேண்டும் என அக்கட்டட உரிமையாளருக்கு மாநகராட்சி சாா்பில் அறிவிப்பாணை வழங்கப்பட்டது. இதையடுத்து தனியாா் வணிக வளாக உரிமையாளா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து மதுக்கரை வட்டாட்சியா் தலைமையில் வணிக வளாகம் நிலை குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்பட்டது. அதில் கட்டடம் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், இதனால் உயிா்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும், அல்லது வேலி அமைத்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு ஆய்வு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.