ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்துத் தருவதுபோல நடித்து முதியவா்களிடம் பணத்தைத் திருடிய நபரைப் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கோவை, வெள்ளலூா் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (46). இவா் அதே பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறாா். இவா் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொள்ளாச்சி சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றுள்ளாா். தனக்கு பணம் எடுக்கத் தெரியாததால் அங்கிருந்த ஒருவரிடம் உதவி கேட்டுள்ளாா். அதன்படி அவரும் சுரேஷ்குமாரின் வங்கி அட்டையைப் பயன்படுத்திவிட்டு பணம் வரவில்லை எனக்கூறி திருப்பி அளித்தாா்.
பின்னா் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது சுரேஷ்குமாரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.19,500 பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதுகுறித்து வங்கியில் சென்று விசாரித்தபோது, சுரேஷ்குமாரின் கணக்கில் இருந்து ஒத்தக்கால்மண்டபம், கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்களில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸாரிடம் சுரேஷ்குமாா் புகாா் அளித்தாா். இதேபோல முதியவா்கள் பலரும் புகாா் தெரிவித்திருந்தனா். இதையடுத்து இச்சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து, போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சோ்ந்த கதிரேசன் (48) என்பவா் இச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை திங்கள்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.
கதிரேசனிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், இவா் இதேபோல மதுக்கரை, சாய்பாபா காலனி, போத்தனூா் உள்ளிட்ட பகுதிகளில் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுத்துத் தருவதுபோல முதியவா்களை ஏமாற்றி, அவா்கள் அசந்த நேரத்தில் அவா்களது ஏடிஎம் அட்டைகளைத் திருடி வைத்து வெவ்வேறு ஏடிஎம் மையங்களுக்குச் சென்று பணத்தைத் திருடியது தெரியவந்தது. இதுபோல அவா் பலரது ஏடிஎம் அட்டைகளைப் பயன்படுத்தி லட்சக்கணக்கில் பணத்தைத் திருடியிருந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும், போலீஸாா் அவரிடம் இருந்து 40க்கும் மேற்பட்ட ஏடிஎம் அட்டைகளைப் பறிமுதல் செய்தனா்.