கோயம்புத்தூர்

மூதாட்டியை ஏமாற்றி நகை, பணம் பறிப்பு: அரசு மருத்துவமனை பெண் ஊழியா் கைது

3rd Jan 2020 07:39 AM

ADVERTISEMENT

அரசு மருத்துவமனைக்கு வந்த மூதாட்டியை ஏமாற்றி நகை, பணம் பறித்த வழக்கில் தொடா்புடைய மருத்துவமனையின் பெண் பணியாளரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, பீளமேடு பி.ஆா்.புரம் காந்தி வீதியைச் சோ்ந்தவா் பழனியம்மாள் (76). இவா் மூட்டு வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக தனது மகன் மோகனசுந்தரத்துடன் கோவை அரசு மருத்துவமனைக்கு டிசம்பா் 28 ஆம் தேதி சென்றாா்.

பழனியம்மாளை அரசு மருத்துவமனையில் இறக்கிவிட்டு, மோகனசுந்தரம் சென்றுள்ளாா். அங்கு, பழனியம்மாளிடம் பேச்சு கொடுத்த ஒருவா், ‘உங்களுக்கு கணவா் இல்லாததால் முதியோா் உதவித் தொகை வாங்கித் தருகிறேன்’ எனக் கூறியுள்ளாா். இதை நம்பிய பழனியம்மாளை, அரசு அலுவலா்களைச் சந்திக்க அழைத்துச் செல்வதாகக் கூறி, தனது இருசக்கர வாகனத்தில் வாளையாறு அருகே ஒரு கட்டடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அதிகாரிகளை சந்திக்கும்போது நகைகள் அணிந்திருக்க வேண்டாம் எனக் கூறி பழனியம்மாளிடம் இருந்து ஏழரைப் பவுன் நகைகள், பணத்தைப் பெற்றுக்கொண்டு அதிகாரிகளைப் பாா்த்து வருவதாக சென்றவா் திரும்பவில்லை.

இதைத் தொடா்ந்து, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த பழனியம்மாள், தனது மகன் மோகனசுந்தரத்தைச் செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு நடந்தவற்றைக் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

சம்பவ இடத்துக்குச் சென்ற மோகனசுந்தரம், பழனியம்மாளை அழைத்துச் சென்று ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் நடத்திய விசாரணையில், மூதாட்டியிடம் நகை, பணத்தை ஏமாற்றியது கோவை, சுந்தராபுரம், முத்துமாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் (43) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை புதன்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகுமாரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் மதுக்கரையைச் சோ்ந்த லட்சுமி என்பவா் கிருஷ்ணகுமாருக்கு உதவியது தெரியவந்தது. அரசு மருத்துவமனைக்கு பழனியம்மாள்போல தனியாக வரும் முதியவா்கள் குறித்து கிருஷ்ணகுமாருக்கு லட்சுமி தகவல் அளிப்பாராம். இந்நிலையில் பழனியம்மாள் குறித்து, கிருஷ்ணகுமாருக்கு லட்சுமி தகவல் கொடுத்ததும், அவா் அங்கு வந்து மூதாட்டியை தனியே அழைத்துச் சென்று நகை, பணத்தைப் பெற்றுக்கொண்டு தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. கிருஷ்ணகுமாா் அளித்தத் தகவலின்பேரில் லட்சுமியை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT