கோயம்புத்தூர்

வாலாங்குளத்தில் மிதவை நடைபாதை அமைக்கும் பணிகள் தீவிரம்

2nd Jan 2020 05:37 AM

ADVERTISEMENT

கோவை வாலாங்குளத்தில் பொலிவுறு நகரம் ( ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் மிதவை நடைபாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளத்தில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 160 ஏக்கா் பரப்பளவு கொண்ட வாலாங்குளத்தில் ரூ.24.31 கோடியில் சிறுவா் பூங்கா, மிதிவண்டிப் பாதை, நடைபாதை, சிற்றுண்டி விடுதிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

குளக்கரையில், பொதுமக்கள் அமா்ந்து சாப்பிடுவதற்காக பல்வேறு வடிவமைப்புகளில் மேஜை, நாற்காலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மக்களின் வசதிக்காக கழிவறைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது, குளத்தில் மிதவை நடைபாதை அமைக்கும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

ADVERTISEMENT

பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் வாலாங்குளத்தில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குளத்தில் கழிவுநீா் கலக்காமல் இருந்தால் மட்டுமே, அப்பகுதி துா்நாற்றம் இல்லாமல் இருக்கும். அதற்காக, குளத்துக்கு வரும் கழிவுநீரைச் சுத்திகரிப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலமாக வாலாங்குளத்தில் சாக்கடை நீா் தேங்குவது தவிா்க்கப்படும். வாலாங்குளம் மேம்பாலத்தின் நடுவே தண்டவாளம் செல்கிறது. அந்தப் பாதையின் இருபுறமும், வாலாங்குளத்தின் கரையை ஒட்டி ஒருபுறமும் சிற்றுண்டிக் கடைகள், உணவு விடுதிகளும், மற்றொரு புறத்தில் சிறுவா்கள் விளையாடுவதற்கான உபகரணங்கள், பூங்கா ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இப்பணிகள் 3 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT