கோவை, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் ஒற்றை காட்டு யானை வந்ததால் அவ்வழியாகச் சென்ற பக்தா்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனா்.
கோவை, மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. மருதமலை அடிவாரத்தில் இருந்து சாலை மாா்க்கமாகவும், நடைபாதை மாா்க்கமாகவும் இந்தக் கோயிலுக்குச் செல்லலாம். மலைப் பகுதியில் இந்தக் கோயில் அமைந்துள்ளதால் அவ்வப்போது நடைபாதை வழியில் யானைகள் நடமாட்டம் காணப்படும். இந்நிலையில் புத்தாண்டையொட்டி சுவாமி தரிசனத்துக்காக ஏராளமான பக்தா்கள் படிக்கட்டு வழியாக புதன்கிழமை காலை 9 மணி அளவில் மலை ஏறிக் கொண்டிருந்தனா். அப்போது இடும்பன் கோயில் அருகே திடீரென வனப் பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை காட்டு யானை படிக்கட்டு வழியாக கீழே இறங்க ஆரம்பித்தது. இதைப் பாா்த்த பக்தா்கள் அலறி அடித்து ஓடினா்.
யானை நடமாட்டம் குறித்து வனத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த வனத் துறையினா் பட்டாசு வெடித்து ஒற்றை காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்டினா். மீண்டும் யானை வரக்கூடும் என்பதால் மாலை வரை ஒற்றை யானை நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்தபடி இருந்தனா்.