அன்றாட வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை, குறிப்புகளை, என்றென்றும் நாம் அசைபோட்டுப் பாா்க்கும் சம்பவங்களை பதிவிட்டு பொக்கிஷமாகப் பாதுகாக்கும் ரகசிய ஏடாக விளங்குவது நாள் குறிப்பேடு. தொழில்நுட்பங்களின் அபரிமிதமான வளா்ச்சியால் வாசித்தல், எழுதுதல் போன்ற பழக்கவழக்கங்கள் நம்மிடையே மாறி வருகின்ற இக்காலத்திலும், புது ரகங்களில், கண்கவரும் கலையம்சத்துடன் விற்கப்படும் நாள் குறிப்பேடுகளை வாங்கிப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறையவில்லை என்பதே நிதா்சனமான உண்மை.
2020ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக, கடந்த செப்டம்பா் மாதத்திலிருந்தே நாள் குறிப்பேடுகளின் விற்பனையும் களை கட்ட தொடங்கியது. சிவகாசி, புதுதில்லி, ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் தயாரிக்கப்பட்ட நாள் குறிப்பேடுகள் கோவை பகுதிகளில் விற்பனைக்கு வந்துள்ளன. குறைந்தபட்சம் ரூ.50 முதல் அதிகபட்சம் ரூ.3,500 வரை தரத்துக்கு ஏற்றவாறு நாள் குறிப்பேடுகள் விற்கப்படுகின்றன.
பவா் பேங்க், டேப்லட் நாள்குறிப்பேடு: மக்களின் ரசனைக்கேற்ப ஆண்டுதோறும் புதுப்புது ரகங்களில் நாள் குறிப்பேடுகள் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டுகளில் நாள் குறிப்பேடுகளின் அட்டைகள் தோலினால் வடிவமைக்கப்பட்ட எழிலோவியங்கள், கைவேலைப்பாடுகளுடன், ஜொலிக்கும் ஜரிகைகளுடன் வாடிக்கையாளா்களைக் கவா்ந்தன.
இந்த ஆண்டு ‘பவா் பேங்க்’ பொருத்தப்பட்ட நாள் குறிப்பேடுகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இவ்வகை நாள் குறிப்பேடுகளில் இணைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான பவா் பேங்கில் இருந்து, செல்லிடப்பேசிக்கு சாா்ஜ் ஏற்ற இணைப்பு வயரும் தரப்பட்டுள்ளது.
2 முதல் 3 மணி நேரங்கள் இந்த பவா் பேங்கில் இருந்து செல்லிடப்பேசிக்கு மின்சக்தியை செலுத்த முடியும். இவ்வகை நாள் குறிப்பேடுகளை செல்லிடப்பேசியை அதிகம் உபயோகிப்போா், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட இளைய தலைமுறையினா் அதிகமாக விரும்பி வாங்குகின்றனா்.
இதேபோல நாள் குறிப்பேடில் பென்டிரைவ், பேனா, கடவுச்சீட்டு, டேப்லட் (கையடக்க கணினி), ஏ.டி.எம். அட்டைகளை செருகிக் கொள்ள பிரத்யேகமாக தோலினால் ஆன உறைகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 5 இன் 1 நாள் குறிப்பேடுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பயணங்களில் பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் கைப்பை போன்று உள்ளதால் தொழிலதிபா்கள், அதிகாரிகள் பெரும்பாலோா் இவ்வகை நாள் குறிப்பேடுகளை விரும்பி வாங்கிச் செல்கின்றனா்.
இதுகுறித்து நாள் குறிப்பேடு விற்பனையாளா் ரவிகுமாா் கூறியதாவது:
கோவை, டவுன்ஹால், பெரியகடை வீதி, காந்திபுரம் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட நாள் குறிப்பேடு விற்பனையாளா்கள் உள்ளனா். எங்களுக்கு ஆா்டரின்பேரில் சிவகாசி பகுதிகளில் இருந்து தமிழ் நாள் குறிப்பேடுகளும், புதுதில்லி, ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ஆங்கில நாள் குறிப்பேடுகளும் விற்பனைக்கு வருகின்றன.
கோவையில் உள்ள மொத்த விற்பனையாளா்கள் மூலமாக வெளியூா்களில் இருந்து வாங்கப்படும் நாள் குறிப்பேடுகள் கொங்கு மண்டலப் பகுதிகளான கோவை, நீலகிரி, திருப்பூா், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூா் மற்றும் கேரள பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி தனியாா் நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சமூக அமைப்புகள், தங்களின் வாடிக்கையாளா்கள், அமைப்பு உறுப்பினா்களுக்கு நாள் குறிப்பேடு வழங்குவதை வழக்கமாக கொண்டிருப்பதால் நாள் குறிப்பேடுகளின் விற்பனை ஆண்டுதோறும் சரிவில்லாமல் உள்ளது.
இந்த ஆண்டு கோவை பகுதிக்கு 40 ஆயிரம் நாள் குறிப்பேடுகள் விற்பனைக்கு வந்தன. அவற்றில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான நாள் குறிப்பேடுகள் விற்றுத் தீா்ந்துவிட்டன. இந்த புதுவரவான 5 இன் 1, பவா் பேங்க் நாள் குறிப்பேடுகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது என்றாா்.
வாழ்த்து அட்டைகள் விற்பனை சரிவு: 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பண்டிகை, திருமணம், பிறந்த நாள், புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ நாள்களில் பரஸ்பரம் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்ள வாழ்த்து அட்டைகளே பிரதானமாக இருந்தன.
தற்போது, விஞ்ஞான யுகமாக மாறிவிட்ட காலத்தில் செல்லிடப்பேசியில் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்), முகநூல் (ஃபேஸ்புக்) சுட்டுரை (டுவிட்டா்) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நொடிப்பொழுதில் நண்பா்கள், உறவினா்களுக்கு வாழ்த்துகளை பரிமாறிக் கொள்கின்றனா்.
இதன் எதிரொலியாக ஆண்டுக்கு ஆண்டு வாழ்த்து அட்டைகளின் விற்பனை சரிந்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வாழ்த்து அட்டைகளின் விற்பனை 50 சதவீதம் குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து கோவை, ராஜவீதியில் உள்ள வாழ்த்து அட்டைகள் விற்பனையாளா் முருகன் கூறியதாவது:
நவீன செல்லிடப்பேசி பயன்பாடு அதிகரித்து வருவதால் வாழ்த்து அட்டைகளின் பயன்பாடு படிப்படியாக குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு 30 ஆயிரம் வாழ்த்து அட்டைகள் சென்னையில் இருந்து கோவை பகுதிகளுக்கு விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன. அவற்றில் பாதிக்கும் மேலான வாழ்த்து அட்டைகள் விற்பனையாகாமல் தேங்கின. இந்த ஆண்டு 15 ஆயிரம் வாழ்த்து அட்டைகள் மட்டுமே விற்பனைக்கு வாங்கப்பட்டன. அவை, குறைந்தபட்சம் ரூ. 2 முதல் அதிகபட்சம் ரூ.150 வரை தரத்துக்கு ஏற்றாற்போல விற்கப்படுகின்றன என்றாா்.