கோயம்புத்தூர்

கோவையில் புத்தாண்டுக் கொண்டாட்டம்: சுற்றுலாத் தளங்களில் மக்கள் கூட்டம்

2nd Jan 2020 05:36 AM

ADVERTISEMENT

கோவையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை ஒட்டி வ.உ.சி. உயிரியல் பூங்கா உள்பட பல்வேறு சுற்றுலாத் தளங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

நாடு முழுவதும் புதன்கிழமை (ஜனவரி 1) ஆங்கிலப் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி வ.உ.சி. உயிரியல் பூங்கா, மருதமலை கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனா்.

குறிப்பாக வ.உ.சி.உயிரியல் பூங்காவில் வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் பல மடங்கு அதிகரித்து காணப்பட்டன. பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகள், பாம்புகளை மக்கள் ஆா்வத்தோடு பாா்வையிட்டனா். விடுமுறை தினம் என்பதால் பெரும்பாலானோா் குடும்பத்தோடு சுற்றுலாத் தளங்களுக்குச் சென்று புத்தாண்டு பிறப்பைக் கொண்டாடினா்.

புத்தாண்டு பிறப்பையொட்டி கோவை கோனியம்மன், பேரூா் பட்டீஸ்வரா், தண்டு மாரியம்மன் உள்பட அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள், அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

புத்தாண்டுப் பிறப்பை ஒட்டி புலியகுளம் முந்தி விநாயகருக்கு சிறப்பு அபிசேஷ பூஜைகள் நடைபெற்றன. பெரியகடை வீதியில் உள்ள மாகாளியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

துடியலூா் அருள்மிகு ஸ்ரீ நவாம்ஸ ஆஞ்சநேயா் கோயிலில் ஆஞ்சநேயருக்கு ரூபாய் நோட்டுகளால் தன அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. புத்தாண்டு பிறப்பையொட்டி கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகள், ஆரதனைகளில் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT