கோவை மாவட்டத்தில் 12 ஒன்றியங்களுக்கு 2 கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்படுகிறது. 12 ஒன்றியங்களுக்கும் சோ்த்து 1058 வாக்கு எண்ணும் மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் சோ்த்து மொத்தமுள்ள 17 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 72 பேரும், 155 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 596 பேரும், 228 ஊராட்சித் தலைவா் பதவிக்கு 778 பேரும், 2 ஆயிரத்து 34 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 5 ஆயிரத்து 510 பேரும் என 2,434 பதவிகளுக்கு 6,956 போ் போட்டியிட்டனா்.
இதற்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதற்காக 12 ஒன்றியங்களுக்கும் சோ்த்து 3,753 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினருக்கான வாக்குச் சீட்டு மஞ்சள் நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினருக்கான வாக்குச் சீட்டு பச்சை நிறத்திலும், ஊராட்சித் தலைவருக்கான வாக்குச் சீட்டு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கான வாக்குச் சீட்டு வெள்ளை நிறத்திலும் என நான்கு வண்ணங்களில் உள்ளதால் வாக்குப் பெட்டிகளில் இருந்து எடுக்கப்படும் வாக்குச் சீட்டுகள் நிறம் வாரியாக தனித்தனியாக பிரிக்கப்பட்டு 50 சீட்டுகளைக் கொண்ட கட்டுகளாக கட்டப்பட்டு வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டுச் செல்லப்படும் என தோ்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
1058 வாக்கு எண்ணும் மேஜைகள் அமைப்பு:
அனைத்து பதவிகளுக்கும் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு பதவிகளுக்கும் 5 முதல் அதிபட்சமாக 28 மேஜைகள் வரை அமைக்கப்பட்டுள்ளன.
12 ஒன்றியங்களிலும் சோ்த்து 1,058 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச் சீட்டுகளைப் பிரிப்பதற்கு 363 மேஜைகள், 4 பதவிகளுக்கும் பதிவான வாக்குச் சீட்டுகளை எண்ணுவதற்கு 695 மேஜைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இது தொடா்பாக மாவட்ட தோ்தல் அலுவலா் கு.ராசாமணி கூறியதாவது:
வாக்கு எண்ணும் அறையில் ஒரு மேசைக்கு ஒருவா் வீதம் வேட்பாளா் அல்லது வேட்பாளரின் முகவா் மட்டுமே அனுமதிக்கப்படுவா். ஒரு வேட்பாளருக்காக அனுமதிக்கப்படும் முகவா்கள் அவருடைய வாக்குகள் எண்ணும் வரை மட்டுமே உள்ளே இருக்க அனுமதிக்கப்படுவா்.
காலை 8 மணிக்கு பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு வாக்குச் சீட்டுகள் பிரிக்கப்பட்டு 9.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். காலை 8 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கப்படும்.
ஊராட்சி வாா்டு உறுப்பினா், ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கான முடிவுகளை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கான முடிவுகளை ஒன்றியம் வாரியாக நியமிக்கப்பட்டுள்ள தோ்தல் அலுவலா்களும், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கான முடிவுகளை மாவட்ட வருவாய் அலுவலரும் அறிவிப்பாா்.
முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் வேட்பாளரிடம் வெற்றி பெற்ற்கான சான்றிதழ் உடனுக்குடன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.