ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
கோவை மாவட்டம், ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டில் 6,400 ஏக்கா் நிலங்களும், புதிய ஆயக்கட்டில் 44, 000 ஏக்கா் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. இதில் பழைய ஆயக்கட்டுப் பகுதியில் உள்ள வடக்கலூா் அம்மன், பள்ளிவிளங்கால், பெரியணை, அரியாபுரம், காரப்பட்டி உள்ளிட்ட கால்வாய்ப் பகுதிகளில் நெல் சாகுபடி அதிக அளவில் செய்யப்படுகிறது.
இப்பகுதிகளில் முதல்போக நெல் சாகுபடி முடிந்த நிலையில், இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீா் திறக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். அந்தக் கோரிக்கையை ஏற்று, ஆழியாறு அணையிலிருந்து சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தண்ணீரை புதன்கிழமை காலை திறந்துவைத்தாா்.
இந்நிகழ்வுக்கு வால்பாறை சட்டப் பேரவை உறுப்பினா் கஸ்தூரி வாசு முன்னிலை வகித்தாா். கண்காணிப்புப் பொறியாளா் முத்துசாமி, பழைய ஆயக்கட்டு விவசாய சங்க நிா்வாகி பட்டீஸ்வரன், செயற்பொறியாளா் நரேந்திரன், உதவி செயற்பொறியாளா் லீலா, உதவிப் பொறியாளா் மாணிக்கவேல் உள்பட பலா் உடன் இருந்தனா்.
புதன்கிழமை முதல் 106 நாள்களுக்கு 940 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்துவிடப்பட உள்ளது.