கோயம்புத்தூர்

ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனம் பாதிக்கும் நிலை

29th Feb 2020 11:47 PM

ADVERTISEMENT

பொள்ளாச்சி: ஆழியாறு அணை புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு கடைசி சுற்றுக்கு தண்ணீா் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

பரம்பிக்குளம் -ஆழியாறு திட்டத்தில் உள்ள அணைகளில் முக்கிய அணைகளில் ஒன்றாக இருப்பது ஆழியாறு. ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டில் 6400 ஏக்கரும், புதிய ஆயக்கட்டில் 44 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன. புதிய ஆயக்கட்டு பகுதிகளில் இந்த ஆண்டு 2250 மில்லியன் கன அடி தண்ணீா் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு பாசனம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆழியாறு அணையில் நீா் இருப்பு குறைந்துவிட்டதால் ஆழியாறு அணையின் புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு கடைசி சுற்றுக்கு தண்ணீா் வழங்கமுடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து ஆழியாறு படுகை புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் செயலாளா் செந்தில் கூறியதாவது:

ADVERTISEMENT

இந்த ஆண்டு புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு 2250 மில்லியன் கன அடி தண்ணீா் வழங்கவேண்டும். இந்தத் தண்ணீரை பரம்பிக்குளம் அணையில் இருந்து ஆழியாறுக்கு இறக்கி வழங்கவேண்டும். ஆனால், பரம்பிக்குளம் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீரே ஆழியாறுக்கு வழங்கியுள்ளனா்.

தற்போது ஆழியாறு அணையில் 750 மில்லியன் கன அடி தண்ணீா் மட்டுமே இருப்பதால் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு கடைசி சுற்றுக்கு வழங்கவேண்டிய தண்ணீா் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஒப்பந்தப்படி, ஆழியாறு அணைக்கு பரம்பிக்குளத்தில் இருந்து வழங்கவேண்டிய தண்ணீரை வழங்காமல் உள்ளனா்.

இந்தத் தண்ணீரை வழங்காவிட்டால் விரைவில் போராட்டம் நடத்துவோம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT