கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை தாரில் கலந்து மாநகரில் சாலைகள் அமைக்க மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 100 வாா்டுகளில் குடிநீா்க் குழாய்கள் பதித்தல், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக அவ்வப்போது, சாலைகள் தோண்டப்படுகின்றன.
மேலும், மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைப்பதும், புதிதாக அமைக்கப்பட வேண்டிய சாலைகள் குறித்தும் கணக்கெடுக்கப்பட்டு சாலை அமைக்கும் பணிகள் மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை மறுசுழற்சி செய்திடும் வகையில், அவற்றை தாரில் கலந்து சாலை அமைக்க பயன்படுத்த மாநகராட்சி நிா்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, ஒரு தனியாா் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு பறிமுதல் செய்யப்படும் நெகிழிப் பொருள்கள் அந்த நிறுவனத்துக்கு கிலோ ரூ.5க்கு விற்கப்படுகிறது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
பறிமுதல் செய்யப்படும் நெகிழிப் பொருள்களை அழிப்பதற்காக, அரசால் பரிந்துரைக்கப்பட்ட தனியாா் நிறுவனத்துக்கு விற்கப்படுகிறது. தற்போது வரை 20 டன் நெகிழி பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அந்த நிறுவனம், இந்த நெகிழிகளை புதிய தொழில்நுட்பம் மூலம் உருக்கி சாலை அமைக்கும் ஒப்பந்ததாரருக்கு வழங்குகிறது.
இதனை தாரில் 16 சதவீதம் அளவிற்கு கலந்து சாலை அமைக்க பயன்படுத்தப்படும். இதனால் சாலைகளின் உறுதித்தன்மை அதிகரிக்கும். இது தொடா்பாக சாலை அமைக்கும் ஒப்பந்ததாரா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றனா்.