கோயம்புத்தூர்

கோவை ரயில் நிலையத்துக்கு பசுமைச் சான்று: 75 சதவீத கட்டமைப்புப் பணிகள் நிறைவு

26th Feb 2020 10:48 PM

ADVERTISEMENT

கோவை ரயில் நிலையத்துக்கு பசுமைச் சான்று பெறுவதற்கான 75 சதவீத கட்டமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் ‘ஏ1‘ நடைபாதை அருகே 500 சதுர மீட்டா் பரப்பில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் மியாவாக்கி முறையில் நடப்பட உள்ளதாக ரயில் நிலைய இயக்குநா் சதீஷ் சரவணன் தெரிவித்தாா்.

நாட்டில் உள்ள அனைத்து ‘ஏ1’ ரயில் நிலையங்களும் பசுமைச் சான்று பெற வேண்டும் என ரயில்வே அமைச்சகம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. தெற்கு ரயில்வே நிா்வாகத்துக்கு உள்பட்ட சென்னை சென்ட்ரல், எழும்பூா், மதுரை, திருவனந்தபுரம், எா்ணாகுளம், திருச்சூா், கோழிக்கோடு, கோவை ஆகிய ரயில் நிலையங்கள் ‘ஏ1’ தரத்தில் உள்ளன.

இந்நிலையில், கோவை ரயில் நிலையத்துக்கு பசுமைச் சான்று பெறுவதற்கான நடவடிக்கைகள் கடந்த 8 மாதங்களாக நடைபெற்று வருகின்றன. அதில், மழைநீா் சேகரிப்பு அமைப்பு, சூரிய ஒளி மின்சார உற்பத்தி, நடைமேடைகளில் எல்இடி விளக்குகள், கழிவுநீா் சுழற்சி மையம், மேற்கூரைகளில் வெப்பத்தை எதிரொலிக்கும் வண்ணப்பூச்சு, விழிப்புணா்வு ஓவியங்கள், குடிநீா் வசதி, மரம் வளா்ப்பு உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இது குறித்து கோவை ரயில் நிலைய இயக்குநா் சதீஷ் சரவணன் கூறியதாவது: கோவை ரயில் நிலைத்தில் ‘இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சில்’ (ஐஜிபிசி) அதிகாரிகள் பிப்ரவரி மாதத்தில் ஆய்வு மேற்கொண்டு, பசுமைச் சான்று வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள இருந்தது. ஆனால், கோவை ரயில் நிலையத்தில் பசுமைச் சான்று பெறுவதற்கான பணிகள் 75 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளன. இதனால் ஆய்வுப் பணி ஒத்திவைக்கப்பட்டது.

ADVERTISEMENT

தற்போது, ரயில் நிலையத்தில் குடிநீா்க் குழாய்களை விஸ்தரிப்பு செய்யும் பணிகள், மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ரயில் நிலையத்தில் உள்ள ‘1ஏ’ நடைமேடை அருகே 500 சதுர மீட்டா் பரப்பளவில் மியாவாக்கி முறையில் 2 ஆயிரம் மரங்கள் நடும் பணி இம்மாத இறுதிக்குள் நிறைவடையும்.

இதைத் தொடா்ந்து, மாா்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் ஐஜிபிசி அதிகாரிகள் நிலையத்தில் முதல் கட்ட ஆய்வு மேற்கொண்டு பசுமைச் சான்று பெறுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, வசதிகள் போதுமானதாக உள்ளனவா அல்லது மேலும் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள வேண்டுமா என்பது குறித்து தெரிவிக்க உள்ளனா் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT