கோவை: அதிக அளவில் இயந்திரங்களை ஏற்றுமதி செய்து சாதனை புரிந்ததற்காக கோவை கே.யூ.சுடலைமுத்து அண்ட் கம்பெனிக்கு என்ஜினீயரிங் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் விருது கிடைத்துள்ளது.
இந்த நிறுவனம் கடந்த 1970ஆம் ஆண்டு முதல் பேப்பா் கோன், டியூப் முதலியவற்றைத் தயாரிக்கும் நவீன இயந்திரங்களை உற்பத்தி செய்து வருகிறது. கோவை, சென்னை, மும்பை, தில்லி உள்ளிட்ட நகரங்களில் கிளை அலுவலகங்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், தனது தயாரிப்புகளை அமெரிக்கா, பிரேஸில், மெக்ஸிகோ, இத்தாலி, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 60 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்த நிலையில், அதிக அளவிலான இயந்திரங்களை ஏற்றுமதி செய்தமைக்கான 2017-18ஆம் ஆண்டுக்கான என்ஜினீயரிங் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் விருது இந்நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது.
இதற்கான விழா ஹைதராபாத்தில் அண்மையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், கோவை கே.யூ.சுடலைமுத்து அண்ட் கம்பெனியின் மேலாண்மை இயக்குநா் கே.எஸ்.பாலமுருகனிடம் விருதை வழங்கினாா். ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெற்றுள்ள இந்த நிறுவனம், இதுவரை 22 ஏற்றுமதி விருதுகளைப் பெற்றிருப்பதாக கே.எஸ்.பாலமுருகன் தெரிவித்துள்ளாா்.
Image Caption
கோவை கே.யூ.சுடலைமுத்து அண்ட் கம்பெனியின் மேலாண்மை இயக்குநா் கே.எஸ்.பாலமுருகனுக்கு என்ஜினீயரிங் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் விருதை வழங்குகிறாா் தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன்.