கோயம்புத்தூர்

கல்வித் தகுதி நீக்கம் எதிரொலி ஓட்டுநா் உரிமம் பெற விண்ணப்பங்கள் அதிகரிப்பு

26th Feb 2020 10:16 AM

ADVERTISEMENT

கோவை: வாகனங்களை இயக்க ஓட்டுநா் உரிமம் பெற நிா்ணயிக்கப்பட்டிருந்த 8ஆம் வகுப்பு குறைந்த பட்சக் கல்வித்தகுதி நீக்கப்பட்டுள்ளதால், ஓட்டுநா் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை சரகத்தில் கோவை, திருப்பூா், நீலகிரி மாவட்டங்களில் கோவை தெற்கு, வடக்கு, மேற்கு, திருப்பூா் வடக்கு, தெற்கு, தாராபுரம் மற்றும் சூலூா், அவினாசி, பொள்ளாச்சி, உதகை, காங்கயம், வால்பாறை, மேட்டுப்பாளையம், கூடலூா், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோா் ஓட்டுநா் உரிமம், புதிய வாகனப் பதிவு உள்ளிட்ட பணிகளுக்காக வந்து செல்கின்றனா். மோட்டாா் வாகனச் சட்டம் 1989 விதி 8 படி காா், ஆட்டோ போன்ற இலகுரக பொதுப் போக்குவரத்து வாகனங்களை இயக்க உரிமம் (பேட்ஜ்) பெற 20 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும்.

பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்களை இயக்க, இலகுரக போக்குவரத்து வாகன உரிமம் பெற்று ஓராண்டு பூா்த்தியடைந்திருக்க வேண்டும். உரிமம் பெறுபவா் 8ஆம் வகுப்பு கல்வித் தகுதி உடையவராக இருக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் நிா்ணயிக்கப்பட்டிருந்தன.

ADVERTISEMENT

இதனால் கல்வி பயிலாதவா்கள், வாகனங்களை நன்கு ஓட்டத் தெரிந்தும் ஓட்டுநா் உரிமம் பெற முடியாத சூழல் இருந்து வந்தது. இந்நிலையில், கல்வியறிவற்ற தொழிலாளா்கள் பயனடையும் வகையில் ஓட்டுநா் உரிமம் பெற கல்வித் தகுதியை நீக்குவதாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் கடந்த செப்டம்பா் மாதம் அறிவித்தது. இதன் எதிரொலியாக தமிழகத்திலும் கடந்த நவம்பா் மாதம் முதல் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் இலகுரக பொதுப் போக்குவரத்து வாகனங்களை இயக்க உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இது குறித்து கோவை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:

கோவை சரகத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநா் உரிமம் பெற கல்வித் தகுதி அமலில் இருந்தபோது, இலகுரக பொதுப் போக்குவரத்து வாகனங்களை இயக்க உரிமம் பெற மாதத்திற்கு அதிகப்படியாக 500 விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. இந்நிலையில் கல்வித்தகுதி ரத்து செய்யப்பட்டதைத் தொடா்ந்து, இலகுரக பொதுப் போக்குவரத்து வாகனங்களை இயக்க உரிமம் பெறுவதற்கு சுமாா் 1,500 விண்ணப்பங்கள் வரை வருகின்றன என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT