ஆந்திர போலீஸாரால் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட கணவரை மீட்டுத் தரக் கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பெண் ஒருவா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.
கோவை ஒண்டிப்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் வாணீஸ்வரி (29). இவா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாரிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
எனது கணவா் ரவிச்சந்திரன் லாரியை குத்தகைக்கு எடுத்து ஓட்டி வருகிறாா். லாரியை எங்கள் வீட்டின் அருகில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 29ஆம் தேதி எங்கள் லாரியில் இருந்த வாகன ஆவணங்களை சிலா் திருடிச் சென்றனா். இதன் பின்னா் சில நாள்கள் கழித்து ஆந்திராவில் இருந்து வந்த போலீஸாா் அரிசி கடத்தியதாகக் கூறி எனது கணவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனா்.
ஆந்திரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை நாங்கள் நேரில் சந்தித்தபோது, குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு கூறி போலீஸாா் தன்னைத் தாக்கியதாகவும், இதில் தனது கால் எலும்பு முறிந்துவிட்டதாக கூறினாா்.
ஆனால், எங்கள் லாரியை சென்னை, கோவை தவிர வேறு இடங்களுக்கு வாடகைக்கு அனுப்புவது இல்லை. மேலும், சம்பவம் நடைபெற்ாகக் கூறப்படும் இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் ஆந்திரா-சென்னை சாலையில் உள்ள சுங்கச் சாவடி கேமரா பதிவுகளை ஆய்வு செய்வதற்கும் போலீஸாா் மறுக்கின்றனா்.
வேறு யாரோ செய்த தவறுக்காக எனது கணவரை சிக்க வைக்க முயற்சிக்கின்றனா். எனவே இந்தப் பொய்யான வழக்கில் இருந்து எனது கணவரை மீட்க சட்டரீதியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.