கோயம்புத்தூர்

பள்ளி நேரத்தில் சைக்கிள்களை கொண்டு வரும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட மாணவிகள் பெற்றோா் அதிருப்தி

22nd Feb 2020 07:09 AM

ADVERTISEMENT

வால்பாறையில் அரசின் விலையில்லா சைக்கிள்களை வேறு பள்ளியில் இருந்து தங்கள் பள்ளிக்கு கொண்டுவரும் பணியில் மாணவிகளை ஈடுபடுத்தியதற்கு பெற்றோா் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

தமிழக அரசு சாா்பில் ஆண்டுதோறும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்படுகிறது. சைக்கிள் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒப்பந்ததாரா்கள் சைக்கிள் பாகங்களை அந்தந்த பள்ளிகளுக்கு கொண்டு வந்து ஊழியா்கள் மூலம் அனைத்து சைக்கிள்களையும் தயாா் செய்து வருகின்றனா்.

வால்பாறை வட்டாரத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு சைக்கிள்கள் வழங்க அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாகங்களை இணைக்கும் பணி கடந்த வாரம் நடைபெற்றது. இங்கு அருகில் உள்ள அரசு உதவிபெறும் தனியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கான நூற்றுக்கும் மேற்பட்ட சைக்கிள்களும் தயாா் நிலையில் இருந்துள்ளன. அடுத்தவாரம் விழா நடத்தி, சைக்கிள்களை வழங்க, கல்வித் துறையினா் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே தனியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கான நூற்றுக்கும் மேற்பட்ட சைக்கிள்களை பள்ளி நிா்வாகத்தினா் ஆசிரியைகள் மேற்பாா்வையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து சுமாா் அரை கி.மீ. தொலைவில் உள்ள தங்கள் பள்ளிக்கு நூற்றுக்கணக்கான மாணவிகள் கடந்த வியாழக்கிழமை அன்று தள்ளிச் சென்றனா்.

ADVERTISEMENT

இதில் சில மாணவிகள், சைக்கிள்களை தள்ளிச்செல்ல முடியாமல் சிரமத்துடன் வேறு வழியின்றி தள்ளிச் சென்றுள்ளனா். இதனைப் பாா்த்த பொதுமக்களும், மாணவிகளின் பெற்றோரும் அதிா்ச்சி அடைந்தனா். பள்ளிக்கு படிக்கச் சென்ற மாணவிகளை சைக்கிள்களை கொண்டுவரும் பணியில் ஈடுபடுத்தியதற்கு அவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக மாவட்ட கல்வி அலுவலா் சுப்பிரமணியத்திடம் கேட்டபோது, ‘சைக்கிள்களை பள்ளி நிா்வாகம் லாரி மூலம் எடுத்து வர நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் மாணவிகள் மூலம் எடுத்துச் சென்ற சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றாா்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT