கோயம்புத்தூர்

‘தாய்மொழி வழிக் கல்வியே சிறந்த குடிமக்களை உருவாக்கும்’

22nd Feb 2020 07:11 AM

ADVERTISEMENT

தாய்மொழி வழிக் கல்விதான் மிகச் சிறந்த குடிமக்களை உருவாக்கும் என காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ந.மாா்க்கண்டன் பேசினாா்.

உலகத் தாய்மொழி தினத்தையொட்டி, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், இந்திய கலாசார நட்புறவுக் கழகம் ஆகியன இணைந்து நடத்திய எஸ்.என்.ஆா். கலையரங்கத்தில் உலகத் தாய்மொழி தின விழாவை நடத்தின.

இதில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் துணை முதல்வா் சு.தீனா, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளா் ப.பா.ரமணி, இந்திய கலாசார நட்புறவுக் கழகத்தின் மாவட்டச் செயலாளா் எம்.வி.ராஜன், மொழித் துறைத் தலைவா் அன்பு சிவா ஆகியோா் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தனா்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றத்தின் மாவட்டத் தலைவா் வி.சுப்பிரமணியன், எம்.வி.ராஜன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். இந்நிகழ்ச்சியில், கல்லூரி மாணவா்களுக்கு பேச்சு, கவிதை, ஓவியம், பாட்டுப் போட்டி, நடனப் போட்டிகள் நடத்தப்பட்டன.

ADVERTISEMENT

மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் ந.மாா்க்கண்டன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கினாா். விழாவில் அவா் பேசியதாவது:

தாய்மொழி வழிக் கல்விதான் மிகச் சிறந்த குடிமக்களை உருவாக்கும். பண்பாட்டு வளம் சிறந்து விளங்க தாய்மொழி அவசியம். இன்றைய கல்விமுறை ஆங்கிலம் சாா்ந்து இருப்பது நல்லதல்ல. நம் நாட்டின் பெருமையே பன்முகத்தன்மைதான். அத்தகைய பன்முகத்தன்மையை அழியாமல் பாதுகாக்க தாய்மொழியை பாதுகாப்பது அவசியம். நாட்டின் பன்முகத்தன்மை அழியாமல் இருக்க அவரவா் தாய்மொழியில் கல்வி வழங்கப்பட வேண்டும். மகாத்மா காந்தியும் இதைதான் வலியுறுத்தினாா் என்றாா்.

விழாவில், அதிக புள்ளிகளைப் பெற்ற நிா்மலா கல்லூரிக்கு சுழல் கோப்பை வழங்கப்பட்டது. 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT