கோயம்புத்தூர்

ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டம்: இந்திய ஜவுளி கூட்டமைப்பு வரவேற்பு

22nd Feb 2020 07:10 AM

ADVERTISEMENT

மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டத்தை இந்திய ஜவுளி கூட்டமைப்பு (சிட்டி) வரவேற்றுள்ளது.

இது தொடா்பாக அந்த அமைப்பின் தலைவா் டி.ராஜ்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் புதிய ஜவுளிக் கொள்கையை அறிவிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் தொழில்நுட்ப இடைவெளி குறைந்து சமுதாய, சுற்றுச்சூழல் நலம் பேணப்பட்டு, இந்திய பொருள்களுக்கு சா்வதேச அங்கீகாரம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

உலக அளவில் இந்திய ஜவுளித் துறை முன்னிலைப்படுத்தப்படும். இதையொட்டி மெகா ஜவுளிப் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அனைத்துப் பிரிவு ஜவுளி உற்பத்தியையும், ஒரே இடத்தில் கொண்டுவந்து அதிக உற்பத்தி செய்யப்படும். உற்பத்தி செலவு குறைவதால் பன்னாட்டு சந்தையில் நமது ஜவுளிப் பொருள்கள் போட்டியிட ஏதுவாக இருக்கும்.

ADVERTISEMENT

கடந்த 20 ஆண்டுகளில் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ரூ. 4 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டத்தால் விசைத்தறித் துறை, பல்வேறு ஜவுளி மையங்களில் செயல்படும் தொழில்கள் ஆகியவை நவீனமடையும். வங்கதேசம், வியத்நாம் போன்ற ஜவுளித் தொழிலுக்கு புதிதாக வந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஒரே குடையின் கீழ் உற்பத்தி செய்து உற்பத்தி செலவை குறைக்கும் வசதி நம்மிடம் இல்லாமல் இருந்தது.

இதனால் அண்மையில் ஜவுளித் துறையில் சீனா, பின்தங்கியபோதும் நம்மால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா மூலம் மற்ற நாடுகளுடன் போட்டியிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு ஜவுளித் துறையில் அந்நிய முதலீட்டை ஈா்ப்பதற்கும், கூட்டு வியாபார முயற்சிக்கும், ஒருங்கிணைக்கப்பட்ட ஜவுளி உற்பத்தியை ஊக்குவிக்கவும், பெரிய அளவிலான ஜவுளி உற்பத்தி ஆலைகளை ஏற்படுத்தவும் முயற்சி செய்து வருகிறது.

மெகா ஜவுளிப் பூங்காவினால் இந்திய ஜவுளித் துறைக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அதிக வா்த்தக வாய்ப்புகள் கிடைக்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT