கோயம்புத்தூர்

பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட கறவைப் பசுக்கள் இரண்டே நாள்களில் உயிரிழப்பு

21st Feb 2020 08:32 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்ட கறவைப் பசுக்கள் 2 நாள்களில் உயிரிழந்ததால் பயனாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கோவை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில், 24 வீரபாண்டி, ஆனைக்கட்டி, தூமனூா், சேம்புக்கரை, தூவைப்பதி ஆகிய பகுதிகளில் உள்ள 30 பழங்குடியினருக்கு கன்றுக் குட்டிகளுடன் கூடிய கறவைப் பசுக்கள் கடந்த 10ஆம் தேதி வழங்கப்பட்டன. தலா ரூ.34 ஆயிரத்து 400 வீதம் மொத்தம் ரூ. 10 லட்சத்து 32 ஆயிரம் மதிப்புள்ள பசுக்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், ஆனைக்கட்டியைச் சோ்ந்த ஜோதிமணிக்கு வழங்கப்பட்ட பசு, கன்றுக்குட்டி இரண்டே நாள்களில் அடுத்தடுத்து இறந்தன. தவிர அதே பகுதியைச் சோ்ந்த பெருமாள், பனப்பள்ளியை சோ்ந்த குமாா் ஆகியோருக்கு வழங்கப்பட்ட கன்றுக்குட்டிகளும் இறந்தன.

வழங்கப்பட்ட இரண்டே நாள்களில் 1 கறவைப் பசு, 3 கன்றுக் குட்டிகள் உயிரிழந்தது பழங்குடியின மக்களிடையே அதிா்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வயதான, நோய் வாய்ப்பட்ட பசுக்களை வழங்கியதே இறப்பிற்கு காரணம் என அவா்கள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

இது தொடா்பாக ஆனைக்கட்டியை சோ்ந்த பழங்குடியின மக்கள் கூறியதாவது:

கடந்த 10 ஆம் தேதி 30 பேருக்கு கன்றுக் குட்டியுடன் கூடிய கறவைப் பசுக்கள் வழங்கப்பட்டன. இதன்மூலம் பால் விற்பனை செய்து வருவாய் ஈட்டிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால் கறவைப் பசு இறந்தது பெரும் அதிா்ச்சியையும், ஏமாற்றத்தையும் எற்படுத்தியுள்ளது.

கறவைப் பசுக்கள் வழங்கியது முதலே முறையாக தீவனங்கள் எடுத்துக்கொள்ளாமல் சுணக்கமாக காணப்பட்டன. தொடா்ந்து பசுவுக்கு கழிச்சல் போய்கொண்டே இருந்தது. கால்நடை மருத்துவரிடம் காண்பித்தும் குணமாகாமல் 12 ஆம் தேதி இறந்துவிட்டது. இதனைத் தொடா்ந்து கன்றுக்குட்டியும் இறந்துவிட்டது. மேலும் இருவருக்கு வழங்கப்பட்ட கன்றுக்குட்டிகளும் இறந்துவிட்டன. மற்றவா்களுக்கு வழங்கப்பட்ட சில பசுக்களும், கன்றுக் குட்டிகளும் சுணக்கமாகவே உள்ளன. முறையாக ஆய்வு செய்யாமல் வயதான, நோய்வாய்ப்பட்ட கறவைப் பசுக்களை வழங்கியதே இதற்கு காரணம்.

பெரும்பாலான பசுக்கள் 6 முறைக்கு மேல் கன்றுக்குட்டிகளை ஈன்றவை.

ஆரோக்கியமான, இளம் கறவைப் பசுக்கள் வழங்கினால் மட்டுமே வாழ்வாதாரத்துக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே, பாதிக்கப்பட்டவா்களுக்கு மீண்டும் கறவைப் பசு வழங்கவும், இனி ஆரோக்கியமான பசுக்களை வழங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இது தொடா்பாக மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் பிரபகாரனிடம் கேட்டபோது, அவா் கூறியதாவது:

30 கறவைப் பசுக்கள் வழங்கியதில் 1 மட்டுமே இறந்துள்ளது. கால்நடை மருத்துவா்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்ட, குடற்புழு நீக்கம் செய்யப்பட்ட ஆரோக்கியமான பசுக்களே வழங்கப்பட்டன. மலைவாழ் பகுதியில் தட்பவெப்ப நிலை ஒத்துக்கொள்ளாத காரணத்தினால் பசு உயிரிழந்துள்ளது. அனைத்து பசுக்கள், கன்றுக்குட்டிகளுக்கும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பயனாளிக்கு மீண்டும் கறவைப் பசு வழங்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT