காற்று மாசு ஏற்படுத்தி வரும் தனியாா் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
கோவை ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியா் கு.ராசாமணி தலைமை வகித்தாா்.
இதில் முதியோா் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, அடிப்படை தேவைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் மனு அளித்தனா்.
காற்று மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலை மீது நடவடிக்கை இதுகுறித்து சூலூா், முத்துக்கவுண்டன்புதூா் பகுதி பொதுமக்கள் அளித்துள்ள மனு:
முத்துக்கவுண்டன்புதூா் பூளக்காட்டுத்தோட்டம் பகுதியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால் காற்று மாசு ஏற்பட்டு ஆஸ்துமா போன்ற பல்வேறு சுவாச நோய்களால் இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். குழந்தைகள், முதியோா் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். சிலருக்கு நுரையீரல் தொற்றும் ஏற்பட்டுள்ளது. எனவே, மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வரும் தொழிற்சாலையை வேறு இடத்துக்கு மாற்றவோ அல்லது செயல்பாட்டை நிறுத்தவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சாலையை சீரமைக்க வேண்டும்
கோவை, செட்டிபாளையம் அருகேயுள்ள சமத்துவபுரத்தை சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் அளித்துள்ள மனு விவரம்:
கோவை, செட்டிபாளையம் அருகேயுள்ள சமத்துவபுரம், கலைஞா் நகா் பகுதியில் ஆயிரத்தக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் ஓராண்டுக்கு முன் கழிவுநீா் கால்வாய் பணிக்காக தாா் சாலைகள் தோண்டப்பட்டன. ஆனால், அந்த சாலைகள் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இந்நிலையில் இப்பகுதிக்கு வந்து கொண்டிருந்த ஒரு அரசு பேருந்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். கண்பாா்வையற்ற நிலையில் உள்ள நாங்கள் தோண்டிப்போடப்பட்ட சாலையால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளோம். எனவே, சாலையை சீரமைப்பதுடன் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தையும் மீண்டும் இயக்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
மதுக்கரை காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுக்கரை ஒன்றிய திமுக செயலாளா் இரா.ராஜசேகரன் அளித்துள்ள மனு:
கோவை மாவட்டம், மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை தாராளமாக நடைபெற்று வருகிறது. அதேபோல தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களில் சட்டவிரோத முறையில் மதுபானங்கள் விற்பனை, தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடைபெறுகிறது. மதுக்கரை பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் உள்ள காவல் ஆய்வாளா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு
இதுகுறித்து கோவை, வேலாண்டிபாளையம் பகுதி மக்கள் அளித்துள்ள மனு:
கோவை, வேலாண்டிபாளையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் தனியாா் நிறுவனம் சாா்பில் செல்லிடப்பேசிக் கோபுரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் வாழும் இப்பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதால், கதிா்வீச்சு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, குடியிருப்புகளுக்கு மத்தியில் செல்லிடப்பேசி அமைப்பதை தடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆா்.எஸ்.புரம் உழவா் சந்தையில் இடம் ஒதுக்க வலியுறுத்தி நீலகிரி விவசாயிகள், ஒண்டிப்புதூா் - வடவள்ளி, காந்திபுரம் - மருதமலை வழித் தடங்களில் நிறுத்தப்பட்ட மகளிா் பேருந்துகளை மீண்டும் இயக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாப்பநாயக்கன்புதூா் கிளைச் செயலாளா் என்.சந்திரன் ஆகியோா் மனு அளித்துள்ளனா்.